சச்சினுக்கு பின்னர் வான்கடேவில் ரோஹித் சர்மாவுக்கு கிடைக்கவுள்ள கௌரவம்!
ரோஹித் சர்மா கேப்டனாக 2024 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த நிலையில், அதன் பின்னர் 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையையும் வென்று கொடுத்தார்.

இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பை கிரிக்கெட் பல்வேறு சிறந்த வீரர்களையும் கேப்டன்களையும் அளித்துள்ள நிலையில் மும்பையின் முக்கிய கிரிக்கெட் மைதானமான வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு என ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு முன் மும்பையைச் சேர்ந்த விஜய் மெர்ச்சண்ட், திலீப் வெங்சர்க்கார், சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது பெயர்கள் வான்கடே மைதானத்தில் உள்ள ஸ்டாண்டுகளுக்கு வைக்கப்பட்டது.
கடைசியாக சச்சின் டெண்டுல்கருக்கு அந்த கௌரவம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா பெயர் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட உள்ளது.
டிவேச்சா பெவிலியன் மூன்றாவது நிலை ஸ்டாண்டுக்கு தான் ரோஹித் சர்மாவின் பெயர் வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், முன்னாள் பிசிசிஐ மற்றும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த சரத் பவார் மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் அஜித் வாடேகர் ஆகியோரது பெயர்களும் இரண்டு ஸ்டாண்டுகளுக்கு வைக்கப்பட உள்ளது.
ரோஹித் சர்மா கேப்டனாக 2024 டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த நிலையில், அதன் பின்னர் 2025 சாம்பியன்ஸ் ட்ராஃபி கோப்பையையும் வென்று கொடுத்தார்.
தோனி மற்றும் கபில் தேவுக்குப் பிறகு இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த மூன்றாவது கேப்டன் ஆவார் ரோஹித். மேலும் ஒரு வீரராக அவர் தற்போது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த நான்காவது வீரராக இருக்கிறார். இந்த பெருமைகளுக்காக ரோஹித் சர்மாவுக்கு மும்பை கிரிக்கெட் அமைப்பு இந்த கௌரவத்தை அளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.