டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 5 இந்திய வீரர்கள்! ரோகித் சர்மா படைக்கவுள்ள சாதனை!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன், இலங்கைக்கு சென்றிருந்த நியூசிலாந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து உள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 2ஆவது போட்டி 24 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் புனேயில் நடைபெறுகிறது. 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் மும்பையில் நடைபெறுகிறது.
இந்த மைதானங்கள் எல்லாம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்கள் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது.
கடைசியாக இரு அணிகளும் 2021 ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மோதியதுடன், இந்தியா 352 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 62 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 22 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. நியூசிலாந்து 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
கடைசியாக இரு அணிகளும் மோதிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 3 போட்டியில் ஜெயித்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதே போன்று அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பர் 1 இடத்தில் இருந்தார். இவரைத் தொடர்ந்து பிஷான் சிங் பேடி, ஈஎஎஸ் பிரசன்னா, அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், வெங்கடராகவன், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் தான் நியூசிலாந்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு சாதனையை படைக்க இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்களின் பட்டியலில் விரேந்திர சேவாக் 90 சிக்ஸகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
ரோகித் சர்மா 87 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
விரேந்திர சேவாக்: 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடிய அதிரடி மன்னன் விரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 178 இன்னிங்ஸ் விளையாடி 8503 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 319 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 31 அரைசதங்கள் மற்றும் 23 சதங்கள் அடங்கும். இதில் 1219 பவுண்டரிகளும், 90 சிக்ஸர்களும் அடித்துள்ளார்.
ரோகித் சர்மா: 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வரும் ரோகித் சர்மா 61 போட்டிகளில் 105 இன்னிங்ஸ் விளையாடி 4179 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 சதங்களும், 17 அரைசதங்களும் அடங்கும். மேலும், 456 பவுண்டரிகளும், 87 சிக்சர்களும் அடித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி: 2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் 90 டெஸ்ட் போட்டிகளில் 144 இன்னிங்ஸ் விளையாடி 4876 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 224 ரன்கள் எடுத்துள்ளார். 6 சதங்கள், 33 அரைசதங்களும் அடித்துள்ளார். மேலும், 544 பவுண்டரிகளும், 78 சிக்ஸர்களும் அடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி 3ஆவது இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்: 1989 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸ் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 248* ரன்கள் எடுத்த சச்சின், 51 சதங்கள், 768 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், 2058க்கும் அதிகமான பவுண்டரிகள் அடித்த சச்சின் 69 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து 4ஆவது இடம் பிடித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜா: 2012 முதல் தற்போது வரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வரும் ஜடேஜா 74 போட்டிகளில் 107 இன்னிங்ஸ் விளையாடி 3130 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 175* ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 4 சதங்கள், 21 அரைசதங்கள் அடித்துள்ளார். அதோடு, 309 பவுண்டரிகளும், 66 சிக்ஸர்களும் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளார்.