டெஸ்ட் தொடரில் மீண்டும் ரோஹித் சர்மா.. கேப்டனா? சூசகமாக சொன்ன ஹிட்மேன்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் உடனான நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றார்.
நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்வி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நீக்கம், சாம்பியன்ஸ் டிராபி வெற்றி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ரோஹித் பேசி உள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக ஏராளமான பின்னடைவுகளை சந்தித்ததாகவும், சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால், கம்பேக் கொடுக்க வேண்டும் என்று விரும்பியதாக அவர் கூறியுள்ளார்.
ஐசிசி தொடரை வெற்றிக்கொள்ள போகின்றோம் என்பதை யார் வேண்டுமானாலும் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால் எப்படி செய்ய போகின்றோம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
இந்திய அணியில் விளையாடி அனைத்து வீரர்களிடம் அந்த தெளிவு இருந்தது. ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆடிய அதே அணியுடன் தான் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடினோம். காயம் காரணமாக பும்ரா மட்டுமே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஒரு அணியாக தனி அல்லது இரண்டு வீரர்களை சார்ந்து இருக்க கூடாது. ஓய்வறையில்அனைவருக்குள்ளும் இந்த விஷயங்களை பேசிக்கொள்வோம்.
எனவேதான், இந்திய அணியில் எப்போதும் யாரை சார்ந்தும் இருந்ததில்லை. கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, கோப்பையை வெல்ல வேண்டும், இந்திய அணியுடன் நேரம் செலவிட வேண்டும், அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றும்.
ஆனால் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை ரன்களை சேர்ப்பது மட்டும்தான் என்று யோசிப்போம். அழுத்தமான சூழல்களில் ரன்களை சேர்க்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், ஒரு கட்டத்தில் அணியாக விளையாடும் போது ரன்களை சேர்ப்பதை விடவும் அதிக கோப்பைகளையும், வெற்றிகளை பெற வேண்டும் என்று சிந்திப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிட்னி டெஸ்ட் போட்டியில் நான் களமிறங்கவில்லை. அதுதான் இந்திய அணிக்கும் கடைசி ஆட்டமாக அமைந்தது. அந்த டெஸ்ட் தொடரில் என்னால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை. இன்னும் சில வீரர்களும் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறினர்.
அந்த நேரத்தில் சுப்மன் கில்லை நிச்சயமாக களமிறங்க வேண்டும் என்று ஆலோசித்தோம். அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை. ஆனால் நிச்சயம் வரும் காலங்களில் என்னால் ரன்களை சேர்க்க முடியும்.
எப்போதும் ஒரு அணிக்கு என்ன தேவையோ, அதனை பொறுத்தே முடிவு எடுக்கப்பட வேண்டும். சில நேரங்களில் அந்த முடிவு சரியானதாக அமையலாம். சில நேரங்களில் மோசமான முடிவாக கூட இருக்கலாம்.
ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்தடுத்து 2 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம். அந்த 2 தொடர்களிலும் அனைத்து வீரர்களும் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்தனர்.
இதன்போது பேட்டியெடுத்த மைக்கில் கிளார்க், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துகள் என்று கூற, அதற்கு ரோஹித் சர்மா, என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக, ஐபிஎல் தொடருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி விளையாடவுள்ள 5 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் பங்கேற்கவுள்ளமை தெளிவாகி உள்ளது.
எனவே, அந்த டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பின் ரோஹித் சர்மாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என்றும் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் பும்ராவின் காயம் காரணமாக இந்திய அணி மீண்டும் ரோஹித் சர்மா பக்கம் திரும்பி உள்ள இந்த நிலையில், 38 வயதாகும் ரோஹித் சர்மா நீண்ட மாதங்களாக ஃபார்மில் அவுட்டில் உள்ள நிலையில், பிசிசிஐ நிர்வாகம் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்வு செய்யக் கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவருக்கு பதிலாக சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பை அளிக்க வேண்டும் என்றும் கூறுவதுடன், 2 ஆண்டுகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடையும் போது ரோஹித் சர்மா 40 வயதை எட்டிவிடுவார் என்பதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.