அடுத்தடுத்து காலியான 6 விக்கெட்டுகள்... பீதியாகிவிட்டோம்.. பதற்றத்தில் டூ பிளசிஸ்!
ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. பின்னர் ஆர்சிபி அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இதன் மூலம் ஆர்சிபி அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளதுடன், 11 போட்டிகளில் 7 தோல்வி, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் வென்ற பின் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், கடந்த சில போட்டிகளாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அதேபோல் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.
இன்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங்கில் சில கேட்ச்களை மிஸ் செய்தோம். இந்த மைதானத்தில்180 முதல் 190 ரன்கள் என்பதே சராசரி ரன்களாக இருந்தது. ஆனால் இன்றைய ஆட்டம் அப்படியில்லை. சேஸிங் செய்ய களமிறங்கிய போது நாங்கள் ஸ்கோரை பார்க்கவே இல்லை.
வழக்கம் போல் களமிறங்கி எப்படி விளையாடுவோமோ, அப்படியே விளையாடினோம். பவர் பிளே ஓவர்களுக்கு பின் திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த பின், கொஞ்சம் நிதானமாக விளையாட ஆரம்பித்தோம் என்றார்.