தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு என்ன ஆச்சு? லண்டனில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை!
சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களை விளாசினார்.
தமிழக நட்சத்திர வீரர் சாய் சுதர்சனுக்கு லண்டனில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன், அவரால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்குள் முழுமையாக குணமடைந்து கம்பேக் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பின் தமிழ்நாட்டின் முக்கியமான நட்சத்திர வீரரான சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களை விளாசினார்.
ஏற்கனவே இந்திய ஒருநாள் அணிக்காக சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் டெஸ்ட் அணியிலும் தடம் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடி சதம் விளாசி இருந்தார்.
23 வயதை மட்டுமே எட்டியுள்ளதால், அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில், ரஞ்சி டிராபி தொடரிலும் டெல்லி அணிக்கு எதிரான இரட்டை சதம் விளாசி அசத்தி இருந்ததுடன், சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணிக்காக ஒரேயொரு போட்டியில் பங்கேற்ற அவர், திடீரென விலகினார்.
கடந்த சில மாதங்களாகவே சாய் சுதர்சன் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா சிக்கலால் தவித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கூட இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.
இடுப்பு பகுதியில் உள்ள திசுக்களில் ஏற்படும் பிரச்சனையால் வீரர்களுக்கு சிக்கல் வரும். இதனை சரி செய்வதற்காக சாய் சுதர்சனை பிசிசிஐ மற்றும் குஜராத் அணி நிர்வாகம் தரப்பில் லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாய் சுதர்சன் தனது எக்ஸ் பக்கத்தில், முழுமையான பலத்துடன் மீண்டும் களம் திரும்புவேன். பிசிசிஐ மற்ரும் மருத்துவக் குழுவினரின் முயற்சிகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் அன்புக்கும், ஆதரவிற்கும் டைட்டன்ஸ் குடும்பத்துக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த ஐபிஎல் தொடர் மார்ச் 15ல் தொடங்கி மே 25ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டல் குறைந்தது 6 முதல் 8 வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், அடுத்த 2 மாதங்கள் சாய் சுதர்சன் கிரிக்கெட் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவார் என்று கூறப்படுகின்றது.