அறிமுகத்திலேயே அசத்திய தமிழக வீரர்... முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் சாதனை!
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்கு அறிமுகமான 25வது வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்பட்டார்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஒருநாள் அணிக்கு தேர்வாகாததால், சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகமாகும் 253வது வீரர் என்ற பெருமையுடன் தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்கு அறிமுகமான 25வது வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றார்.
ஐபிஎல், டிஎன்பிஎல், இந்தியா ஏ, கவுண்டி கிரிக்கெட் என்று சாய் சுதர்சன் மிகச்சிறந்த ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததால், சர்வதேச கிரிக்கெட்டில் அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.
மும்பை அணி முதுகில் குத்திய சோகம்... சிஎஸ்கே அணிக்கு வருகிறாரா ரோகித் சர்மா?
இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணிக்காக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சாய் சுதர்சன் சந்தித்த முதல் பந்திலேயே கவர் டிரைவ் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். அதன்பின் சாய் சுதர்சன் தேவைக்கேற்ப சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சாய் சுதர்சன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் அறிமுகமான முதல் போட்டியிலேயே 41 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியில் அரைசதம் அடித்த முதல் தமிழக வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் படைத்துள்ளார்.