மொத்த ஆட்டத்தையும் மாற்றிய கேட்ச்.. குழம்பிய நடுவர்கள்.. மிரட்டிய தமிழக வீரர்!
ஒரு நிமிடம் எப்படி இந்த கேட்ச் சாத்தியமானது என்று நடுவர்களே குழம்பி, 3வது நடுவரிடம் சோதனை செய்ய கூறினர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய சொன்னது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்களை குவித்தது.
இதையடுத்து 297 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஹென்ரிக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் வந்த வான் டர் டூசன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மார்க்ரம் 36 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸோர்சி 87 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 161 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அதிரடி வீரர்களான கிளாஸன் - டேவிட் மில்லர் கூட்டணி இணைந்தது. இதன்பின் கிளாஸன் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாச, இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர்.
இந்த நிலையில் 33வது ஓவரை வீசுவதற்கு ஆவேஷ் கான் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்கப்பட, 2வது பந்தை லெக் கட்டராக வீசினார். இந்த பந்து கிளாஸன் பேட்டில் அடித்து மிட் ஆஃப் திசையை நோக்கி பறந்து சென்றது.
கிட்டத்தட்ட கீழே விழும் என்று ரசிகர்கள் பார்த்து கொண்டிருந்த நிலையில், திடீரென தமிழக வீரர் சாய் சுதர்சன் சூப்பர்மேன் போல் தாவி பிடித்து அபாரமாக கேட்ச் பிடித்தார்.
ஒரு நிமிடம் எப்படி இந்த கேட்ச் சாத்தியமானது என்று நடுவர்களே குழம்பி, 3வது நடுவரிடம் சோதனை செய்ய கூறினர். அதன்பின் வீடியோவில் சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தது உறுதியானது.
இதனால் கிளாஸன் 21 ரன்களில் வெளியேறினார். இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பினாலும், ஃபீல்டிங்கில் கில்லியாக செயல்பட்டு சாய் சுதர்சன் அசத்தியுள்ளார்.