கைவிட்ட இந்திய அணி... குறைந்த வாய்ப்புகள்... ஓய்வை அறிவித்தார் ஷிகர் தவான்!
ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்று வந்த ஷிகர் தவான் தற்போது அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார்.
சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருக்கிறார். 38 வயது ஆகும் அவருக்கு, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்று வந்த ஷிகர் தவான் தற்போது அனைத்துவித கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார்.
இந்திய அணியில் நீண்ட காலமாக ஷிகர் தவானுக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் தலைமுறை துவக்க வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்ற சூழ்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் உடற் தகுதி காரணமாக ஷிகர் தவானால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை.
இதை அடுத்து தனக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இது குறித்து ஷிகர் தவான் கூறுகையில், "எனக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருந்தது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதுதான் அது. அதை நான் செய்து விட்டேன். எனது பயணத்தில் எனக்கு உதவி செய்த பலருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து நான் ஓய்வை அறிவிக்கிறேன். நான் எனது ஓய்வை அறிவிக்கும் இந்த தருணத்தில் மன அமைதியுடன் இருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் டெல்லி கிரிக்கெட் அமைப்புக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். எனக்கு நானே ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லிக் கொள்கிறேன். மீண்டும் இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை என எப்போதும் சோகமாக இருக்காதே. என்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்காக ஆடியதே மிகப்பெரிய விஷயம்." என்று தெரிவித்துள்ளார்.