இப்படி ஏமாற்றலாமா? இலங்கைக்கு எதிராக வங்கதேசம் ஆடிய மோசமான ஆட்டம்
இலங்கைக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி போங்கு ஆட்டம் ஆடி வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.
இலங்கைக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் வங்கதேச அணி போங்கு ஆட்டம் ஆடி வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.
வங்கதேசத்துக்கு சென்றுள்ள இலங்கை அணி முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி சில்ஹெட் நகரில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் அவிஸ்கா பெர்ணாண்டோ டக் அவுட்டாக, குசல் மெண்டிஸ் 36 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 37 ரன்களும் எடுத்தனர்.
அசலங்க 28 ரன்களும் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களும் எடுக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்க, மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் இலங்கை வீரர் பினுர வீசிய பந்தை சௌமியா சர்க்கார் அடித்தார்.
அப்போது பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. இதற்கு நடுவரும் அவுட் கொடுத்தார். ஆனால் சௌமியா சர்க்கார் திடீரென்று இதற்கு டிஆர்எஸ் கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து மூன்றாம் நடுவர் சோதித்துப் பார்த்தபோது பேட்டில் பந்து கடந்த போது அது ஸ்னிக்கோ மீட்டரில் தெளிவாக காட்டியது.
எனினும் மூன்றாம் நடுவர் அதற்கு நாட் அவுட் வழங்கினார்.
இதனால், அதிர்ச்சிடைந்த இலங்கை அணி வீரர்கள் நடுவரிடம் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் கள நடுவர்கள் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி இலங்கை வீரர்களை சமாதானப்படுத்தினர்.
இதனை அடுத்து மிகவும் ஏமாற்றத்துடன் இலங்கை அணியினர் போட்டியை தொடங்கினர்.
இதனை பயன்படுத்திக் கொண்டு வங்கதேசம் அணி 18 புள்ளி ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.