ரோகித் சர்மா சாதனை முறியடிப்பு... சூர்யகுமார் செய்த அபார சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் படைத்திருக்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் குவித்த நிலையில், வங்கதேச அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த தொடர் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத சூரியகுமார், மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 4 ரன்கள் வெளியேறிய நிலையில், சஞ்சு சாம்சனும் இணைந்து பட்டையை கிளப்பினார்.
சஞ்சு சாம்சன் மின்னல் வேகத்தில் ரன்களை குவிக்க அவருக்கு போட்டியாக சூரியகுமார் யாதவ் 35 பந்துகளை எதிர்கொண்டு எட்டு பவுண்டரி, ஐந்து சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார். சூரிய குமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட் 214 என்ற அளவில் காணப்பட்டது.
இதனையடுத்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் படைத்திருக்கிறார்.
71 இன்னிங்ஸில் சூரியகுமார் யாதவ் இந்த சாதனை செய்துள்ளதுடன், ரோகித் சர்மா 92 இன்னிங்ஸில் 2500 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது சூரிய குமார்யாதவ் அதனை முறியடித்திருக்கிறார்.
அத்துடன், 2019 ஆம் ஆண்டு விராட் கோலி 68 இன்னிங்ஸில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்கள் அடித்த நிலையில், தற்போது வரை முதலிடத்தில் தொடர்கின்றார்.
இந்த நிலையில், சூரிய குமார் யாதவ் இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக பதவியேற்ற பிறகு தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றியை குவித்து உள்ளார்.
தற்போது டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் வரும் 16ஆம் தேதி பெங்களூருவில் தொடங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.