அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை... சாதிக்குமா இந்தியா..? 

இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

அரைஇறுதி போட்டியில் இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை... சாதிக்குமா இந்தியா..? 

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் அணிகளில் இந்தியாவும் ஒன்று. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா, சூப்பர்8 சுற்றில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆஸ்திரேலியா அணிகளை வரிசையாக துவம்சம் செய்து கம்பீரமாக அரைஇறுதிக்குள் நுழைந்திருக்கிறது. 

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்கள் குவித்து வெற்றி பெற்றதும், அதில் கேப்டன் ரோகித் சர்மா 92 ரன் விளாசியதும் இந்தியாவின் நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் பந்து வீச்சில் பும்ரா (11 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்) குல்தீப் யாதவ் மிரட்டுகிறார்கள். இவர்களால் தான் பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றி கிடைத்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா நன்றாக ஆடுகிறார்கள்.

ஆனால் தொடக்க வீரராக ஆடும் விராட் கோலி தடுமாறுவது பின்னடைவாக உள்ளது. 6 ஆட்டங்களில் 66 ரன் மட்டுமே எடுத்து சொதப்பியுள்ள கோலி முக்கியமான இந்த ஆட்டத்திலாவது கைகொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து அணி பெரும்பாடு பட்டு தான் லீக் சுற்றையே தாண்டியது. ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலில் தோல்வியை தழுவியது. 

அதன் பிறகு ஓமன், நமிபியா அணிகளை மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்து ஒரு வழியாக ரன்ரேட் அடிப்படையில் சூப்பர்8 சுற்றுக்கு வந்தது. சூப்பர்8 சுற்றில் தென்ஆப்பிரிக்காவிடம் பணிந்தாலும், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்க அணிகளை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஜோஸ் பட்லர், பில் சால்ட், ஹாரி புரூக் சரியான நேரத்தில் பார்முக்கு வந்து விட்டார்கள். 

பந்து வீச்சில் அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், முந்தைய ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த கிறிஸ் ஜோர்டான் நல்ல நிலையில் உள்ளனர். எல்லா வகையிலும் சரிசமமான பலத்துடன் இருப்பதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகள் 20 ஓவர் போட்டியில் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் இந்தியாவும், 11-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக 2022-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அடிலெய்டில் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதி இருந்தது. அதில் இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. 

அந்த மோசமான தோல்விக்கு இந்தியா வட்டியும், முதலுமாக பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். கயானா ஆடுகளம் ஓரளவு சுழலுக்கு உதவக்கூடியது. தாழ்வான பவுன்சுடன், சுழல் தன்மையும் இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், "ஆடுகளத்தன்மையை பார்த்து ஆராய்ந்த பிறகே, 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவது குறித்து முடிவு செய்வோம். அரைஇறுதியை இன்னொரு சாதாரணமான ஆட்டமாக பாவித்து விளையாட விரும்புகிறோம். அது குறித்து ரொம்ப அதிகமாக சிந்தித்தால் நெருக்கடித் தான் ஏற்படும்" என்று அவர் கூறினார்.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் :-

இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடோ, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், மொயீன் அலி, லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ரீஸ் டாப்லே.

மழை மிரட்டல்

இந்தியா- இங்கிலாந்து அரைஇறுதி நடக்கும் கயானாவில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் கிடையாது. அதே சமயம் மழை குறுக்கிட்டால் 4 மணி மணிநேரம் வரை ஆட்டத்தை நீட்டிக்கலாம். அதிலும் முடிவு கிடைக்காமல் போனால் சூப்பர்8 சுற்று புள்ளி பட்டியல் முன்னிலை அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...