4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை... நியூசிலாந்தை பழிதீர்த்த இந்தியா!
விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது.
உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது.
விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது.
இதில் முகமது ஷமி வீசிய 6வது ஓவரில் கான்வே 13 ரன்களிலும், மீண்டும் முகமது ஷமி வீசிய 8வது ஓவரில் ரச்சின் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன்பின் வில்லியம்சன் - மிட்செல் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இருவரும் அரைசதம் விளாசி அசத்தினார். நியூசிலாந்து அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் முகமது ஷமி வீசிய 33வது ஓவரில் கேன் வில்லியம்சன் 69 ரன்களிலும், டாம் லேதம் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் 40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 266 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் குல்தீப் யாதவ் கொடுத்த அழுத்தத்தால், பும்ராவின் பந்துவீச்சில் கிளென் பிலிப்ஸ் 41 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து குல்தீப் ஓவரிலேயே சாப்மேன் 2 ரன்களில் வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்து அணி வெற்றிபெற கடைசி 6 ஓவரில் 99 ரன்கள் தேவை என்ற நிலை உருவாகியது. இதையடுத்து சிக்ஸ் அடிக்க முயன்று மிட்செல் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றி உறுதியானது.
கடைசி நேரத்தில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன் மூலமாக இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 4வது முறையாக முன்னேறி அசத்தியுள்ளது. 1983, 2003, 2011 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி 4வது முறையாக உலகக்கோப்பை உறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.