விதி விளையாடிருச்சு.. இதான் தோல்விக்கு காரணம்... தென் ஆப்பிரிக்கா கேப்டன் சோகம்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதின.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதின.
இந்த இரண்டு தொடர்களுக்கும் தென் ஆப்பிரிக்கா அணியின் பழைய கேப்டன் டெம்பா பவுமா நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் கொண்டுவரப்பட்டார்.
இந்த நிலையில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்தது.
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இரு அணிகளும் ஒரு போட்டியை வென்று சமநிலையில் தொடர் இருந்த நிலையில், நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்றது.
இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணியே டாஸ் வென்றது. மேலும் இந்த முறையும் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் 108, திலக் வர்மா 55, ரிங்கு சிங் 37 ரன்கள் எடுக்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 இழப்புக்கு 294 ரன்கள் சேர்த்தது.
இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டோனி டி சோர்சி மட்டுமே 81 ரன்கள் எடுத்தார். மற்ற யாரும் சரியான பங்களிப்பு தரவில்லை.
இதனால் தென் ஆப்பிரிக்கா 218 ரன்கள் மட்டும் எடுத்து, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என இழந்தது. தோல்விக்கு பின் பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் “நிச்சயமாக நாங்கள் இந்த போட்டியில் விளையாடி வெல்வதற்கு தயாராக இருந்தோம்.
எப்பொழுதும் ஒரு தொடரை தீர்மானிக்கக்கூடிய போட்டியில், நல்ல கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவது நல்ல உணர்வு. ஆனால் துரதிஷ்டவசமாக எங்களால் இதைச் செய்து முடிக்க முடியவில்லை. நாங்கள் பேட்ச்களில் நன்றாகவே இருந்தோம். ஆனால் இறுதி வரை மொமன்டத்தை எடுத்துச் சென்று வெற்றி பெற முடியவில்லை.
இந்த போட்டியிலும் டாஸ் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அடுத்து டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும். இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மிகச் சிறந்த மைதானங்களில் விளையாடப்படுகிறது. அதைவிட சிறந்த மைதானங்கள் வேறு கிடையாது” என்று கூறி உள்ளார்.