இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த மோடி, அமித் ஷா... கம்பீர் கடும் நிபந்தனை... நடந்தது என்ன?
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பத்தை கோரியுள்ளது
ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை 2024 தொடர் முடிந்த உடனே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிற நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பத்தை கோரியுள்ளது.
இந்த நிலையில், தான் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துவிட்டதாகவும், மீண்டும் விண்ணப்பிக்க மாட்டேன் என உறுதியுடன் இருப்பதாகவும், கூறப்படுகின்றது.
இதனையடுத்து, 50 ஒருநாள் போட்டி அல்லது 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க முன்னாள் வீரரைதான், புதிய தலைமை பயிற்சியாளராக நியமிப்போம் என்றும், இந்த தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இருப்பினும், 50 ஒருநாள் அல்லது 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அல்லது கிரிக்கெட் ஆர்வளர்களும் அல்லது பரிந்துரை செய்பவர்களும் விண்ணப்பிக்கும் வகையில், படிவம் இருக்கிறது.
இந்தநிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது பெயர்களிலும் அதிக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், அதிகளவில் பரிந்துரை என்ற, பிரபலங்களை பரிந்துரை செய்து, சிலர் விண்ணப்பம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், இனி தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிகும் வகையில், படிவத்தை திருத்தியமைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, 50 ஒருநாள் அல்லது 30 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியவர்கள் மட்டுமே, இனி விண்ணப்பிக்க முடியும்.
பாஜகவில் இருந்து விலகி, அரசியலுக்கு முழுக்குப்போட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு, கோப்பையையும் வெல்ல முக்கிய காரணமாக இருந்த கௌதம் கம்பீருக்குதான், தலைமை பயிற்சியாளராக செயல்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், கம்பீர் கடும் நிபந்தனை விதித்து இருப்பதாகவும், தான் தான் தலைமை பயிற்சியாளர் என உறுதி கொடுத்தால் மட்டுமே விண்ணப்பிப்பேன் என கம்பீர் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், அவ்வாறு செய்தால், அது விதிமீறல் ஆகும் என்பதால், பிசிசிஐ வேறு சிலரையும் தொடர்புகொண்டு வருவதாக கூறப்படுகின்றது.