கையில் பந்துடன் விராட் கோலி.. கடும் பயிற்சியுடன் தயாராகும் இந்திய வீரர்கள்!

நட்சத்திர வீரர் விராட் கோலி பந்தை கைகளில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கையில் பந்துடன் விராட் கோலி.. கடும் பயிற்சியுடன் தயாராகும் இந்திய வீரர்கள்!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி திடீரென பவுலிங் செய்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதுடன், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கம்பேக் கொடுத்தது. இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி வரும் 14ஆம் தேதி காபா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், கடந்த முறை காபா மைதானத்தில் விளையாடிய போது இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் புஜாராவின் அபார ஆட்டத்தால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கைப்பற்றியது. 

34 ஆண்டுகளாக காபா மைதானத்தில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. அப்படியொரு ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் நிலையில், அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் விராட் கோலி, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென நட்சத்திர வீரர் விராட் கோலி பந்தை கைகளில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வழக்கமாக வலைப்பயிற்சியில் விராட் கோலி பந்துவீசும் பழக்கம் இல்லாதவர். பயிற்சிக்காக களமிறங்கும் போதே கையில் பேட்டுடன் தான் வருவார். இதனால் விராட் கோலி பவுலிங் செய்த வீடியோ அவரின் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியுள்ளது.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறை விராட் கோலி பவுலிங் செய்துள்ளார். ஆனால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தியதில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பெர்த் டெஸ்டில் சதம் விளாசிய விராட் கோலி, அடிலெய்டில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில், இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப விராட் கோலி ரன்கள் குவிக்க வேண்டியது அவசியமாகும்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp