"ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு" குழந்தைத்தனமாக நடந்த இந்திய வீரர்கள்... விராட் கோலி சேட்டை!
இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு சுற்றிய அந்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்கள் சரிந்து பல திருப்புமுனைகள் அரங்கேறிய நிலையில், விராட் கோலி - சுப்மன் கில் குழந்தைத்தனமான விளையாட்டுக்களில் ஈடுபட்டு சிரிப்பை வரவழைத்தனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
இந்திய அணி ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் ரன் குவித்ததால் 153 ரன்கள் எடுத்து 98 ரன்கள் முன்னிலை பெற்றது. ரோஹித் சர்மா 39 ரன்களும், விராட் கோலி 46 ரன்களும், சுப்மன் கில் 36 ரன்களும் குவித்து இருந்தனர்.
தென்னாப்பிரிக்க அணி முதல் நாளிலேயே இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடத் துவங்கி இருந்தது. அந்த அணி 3 விக்கெட்களை இழந்த நிலையில், ஃபீல்டிங்கில் நின்று இருந்த விராட் கோலி ஜாலி மனநிலையில் இருந்தார்.
தொடர்ந்து சக வீரர்களை கேலி, கிண்டல் செய்து வந்தார். விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஸ்லிப்பில் ஃபீல்டிங் நின்று இருந்த போது குழந்தைகள் விளையாடும் "ரிங்கா ரிங்கா ரோசஸ்" ஆட்டத்தை விளையாடினர்.
இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு சுற்றிய அந்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் அந்த காட்சியை பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.
சில ரசிகர்கள், விராட் கோலிக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இருந்தும் அவர் இன்னும் குழந்தை போல நடந்து கொள்கிறார் என குறிப்பிட்டு இருந்தனர்.