அமைதியான ரோஹித் சர்மா... களத்தில் அதிரடியாக மாற்றங்களை செய்த விராட் கோலி.. நடந்தது என்ன?

ஆஸ்திரேலியா அணி 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. விராட் கோலி பவுலர்களுக்கு அருகில் நின்று ஆலோசனை தொடர்ச்சியாக அளித்து வந்தார். 

அமைதியான ரோஹித் சர்மா... களத்தில் அதிரடியாக மாற்றங்களை செய்த விராட் கோலி.. நடந்தது என்ன?

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி மாறி ஃபீல்டிங் மற்றும் பவுலிங் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை விளாசிய நிலையில், இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலியா அணி 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

இந்திய அணி பவுலிங்கை தொடங்கியது முதலே கேப்டன் ரோஹித் சர்மா அமைதியாக ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் பணிகளை மட்டுமே செய்து வந்த நிலையில், விராட் கோலி பவுலர்களுக்கு அருகில் நின்று ஆலோசனை தொடர்ச்சியாக அளித்து வந்தார். 

ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் இருவரும் பவுலிங் செய்ய வந்த போது, ஒவ்வொரு பந்திற்கும் ஆலோசனைகளை அளித்து வந்தார். சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் கவாஜாவுக்கு வீசிய லெந்தில் திருப்தியடையாத விராட் கோலி, என்ன லெந்தில் வீச வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியதுடன்,  கவாஜா தடுமாறுவதை அறிந்து அவருக்கு ஷார்ட் லெக் ஃபீல்டரை நிறுத்தி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் எளிதாக ரன்களை எடுக்க முடியவில்லை. இந்த டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முதல் செஷனில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. இதனை உணர்ந்து இம்முறை ஆஸ்திரேலியா பிட்சை நன்றாக அறிந்த விராட் கோலி, பொறுப்பை எடுத்து கொண்டார்.

அதற்கேற்ப சாம் கான்ஸ்டாஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்த, மறுமுனையில் முகமது சிராஜ் கவாஜாவை 20 ரன்களில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இந்த போட்டியில் சிராஜ் வீழ்த்தும் முதல் விக்கெட் இதுதான். தொடர்ச்சியாக விராட் கோலி அவருக்கு ஆலோசனைகளை அளித்து வந்த நிலையில், சிராஜ் விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

இந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணியை குறைந்த ஸ்கோரில் வீழ்த்தினால் மட்டுமே, இந்திய அணியால் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் ஆட்டம்நழுவி செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp