விராட் கோலி படைத்த இரண்டு மெகா சாதனை... டேவிட் வார்னரின் நீண்டகால சாதனை முறியடிப்பு

ஒரே ஐபிஎல் தொடரில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற தனது சாதனையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார்.

Apr 28, 2025 - 15:05
விராட் கோலி படைத்த இரண்டு மெகா சாதனை... டேவிட் வார்னரின் நீண்டகால சாதனை முறியடிப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில்  இரண்டு மாபெரும் சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, டேவிட் வார்னரின் நீண்டகால சாதனையை முறியடித்த விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

அத்துடன், ஒரே ஐபிஎல் தொடரில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற தனது சாதனையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், விராட் கோலி நிதானமாக விளையாடி சிறந்த கூட்டணி அமைத்தார். சக வீரர் க்ருனால் பாண்டியா அதிரடியாக விளையாட, மறுபுறம் விராட் கோலி 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

அதன் மூலம், 2025 ஐபிஎல் தொடரில் மொத்தம் 443 ரன்கள் சேர்த்து, அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், 11வது முறையாக ஒரே ஐபிஎல் தொடரில் 400 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். 

ஏனைய எந்த வீரரும் இத்தனை முறை ஐபிஎல் தொடர்களில் 400 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே விராட் கோலி 1154 ரன்கள் சேர்த்து மாபெரும் சாதனை படைத்துள்ளதுடன், முன்னதாக, டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1134 ரன்கள் எடுத்ததே, ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் ஒரு அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1150 ரன்கள் சேர்த்து ஷிகர் தவான் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் விராட் கோலி இருக்கிறார். 
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1104 ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1098 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், மொத்தம் 10 போட்டிகளில் விளையாடி, 16 புள்ளிகளைப் பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!