நட்சத்திர வீரருக்கு அணியில் வாய்ப்பில்லை... பிசிசிஐ முட்டுக்கட்டை... இதுதான் காரணம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறவில்லை.
முகமது ஷமி தனது காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள நிலையில் அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த முடிவை பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு தான் எடுத்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் முடிவில் முகமது ஷமிக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்ட நிலையில், அதற்காக அவர் சிகிச்சை எடுத்தார்.
பின்னர் காயம் குணமான நிலையில், அதன் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட போதும், உள்ளூர் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்தார். எனினும், கடைசி நேரத்தில் அவரது பெயர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
அக்டோபர் 11 அன்று துவங்க உள்ள ரஞ்சி டிராபி முதல் தர டெஸ்ட் தொடரில் பெங்கால் அணிக்காக முகமது ஷமி விளையாடி தனது உடற்தகுதியை நிரூபித்த பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
முகமது ஷமியை அவசரப்பட்டு சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்து பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதாலேயே பிசிசிஐ இந்த முடிவை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் முழு உடற் தகுதியுடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்த பின்னரே பிசிசிஐ அவரை இந்திய அணியில் சேர்க்க உள்ளதுடன், தற்காலிகமாக முகமது ஷமிக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இந்திய அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்பட உள்ளனர்.
அவர்களுடன் ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் இணைந்து பந்து வீசக் கூடும். வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இரண்டு அல்லது மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவார்கள்.
இதனால், ஆகாஷ் தீப் அல்லது யாஷ் தயாள் ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி விளையாடவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.