சிஎஸ்கே தொடர்பில் அஸ்வின் எடுத்த முக்கிய முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா அணியில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தியா அணியில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கிரிக்கெட் வீரராக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த சமயத்தில் இருந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்பான விவாதங்களையும், போட்டி குறித்த நுணுக்கங்களையும் தனது யூடியுப் சேனலில் பேசி வருகிறார்.
இந்த சேனலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் போதும் வீரர்களுடன் அவர் பேசுவது, தினசரி பயிற்சிகள் எப்படி நடக்கிறது என்பதை பற்றி சொல்லி இருப்பார்.
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளில் பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அஸ்வின் ஒவ்வொரு அணியும் எப்படி இருக்கிறது? எந்த அணி வெற்றி பெறும் என்பது பற்றி பல்வேறு வீடியோக்களை கிரிக்கெட் வல்லுநர்களுடன் இணைந்து பேசியுள்ளார்.
இந்நிலையில் இனி இந்த சீசன் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பாக எந்த ஒரு வீடியோவும் தனது யூடியுப் சேனலில் வெளியாகாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சமீபத்திய சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்தடுத்து மூன்று பொடியில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு பிறகு அஸ்வின் யூடியுப் சேனலில் பேசிய பிரசன்னா சென்னை அணிக்கு நூர் அகமது தேவையே இல்லை என்று தெரிவித்திருந்தார். சிஎஸ்கேவில் அஸ்வின் மற்றும் ஜடேஜா போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில் நூர் அகமதின் இடத்தில் ஒரு பேட்டரை விளையாட வைக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து சென்னை அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் நூர் முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்த தொடர் முழுவதும் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக பிரசன்னாவின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் முழுவதும் இந்த கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. அஸ்வின் சரியாக பந்து வீசவில்லை, அவருக்கு பதிலாக வேறொரு வீரரை அணிக்கு கொண்டு வரலாம்.
அதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் நன்றாக விளையாடும் நூர் அகமதை எப்படி அணியிலிருந்து எடுக்க முடியும்? இதில் பாரபட்சம் இருக்கிறது என்று இந்த வீடியோ கிளிப்புகளை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அஸ்வின் இந்த சீசன் முழுவதும் இனி சென்னை அணி தொடர்பாக தனது யூடியுப் சேனலில் எந்த ஒரு வீடியோவும் வராது என்று தெரிவித்துள்ளார்.