பாதி போட்டியில் நீக்கப்பட்ட சிவம் துபே.. சேர்க்கப்பட்ட புதிய வீரர்... நடந்தது என்ன?
ஹர்ஷித் ராணா 12 வது ஓவரை வீசி ஒரு விக்கெட்டையும் சாய்த்ததுடன், அவருக்கு இதுவே அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய நான்காவது டி20 போட்டியில் சிவம் துபே பேட்டிங் செய்து அரை சதம் அடித்த நிலையில் அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், அவருக்கு பதிலாக வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 20 வது ஓவரின் போது சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து தாக்கியது.
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் வீசிய பவுன்சர் ஒன்றை புல் ஷாட்டாக அடிக்க முயற்சி செய்த போது, சிவம் துபே ஹெல்மெட்டில் பந்து தாக்கியது.
அதன் பின் அவருக்கு மூளை அழற்சிக்கான பரிசோதனை செய்யப்பட்டதுடன், அந்த இன்னிங்ஸின் கடைசி பந்தை அவர் சந்தித்தார். அதில் அவர் ரன் அவுட்டும் ஆனார்.
இதை அடுத்து இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 182 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், அப்போது பந்து வீச வந்த இந்திய அணியினருடன் சிவம் துபே களத்துக்கு வரவில்லை.
முதலில் ரமன்தீப் சிங் அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்தார். சரியாக ஆறாவது ஓவரின் முடிவில் ஹர்ஷித் ரானா களத்துக்கு வந்தார். அப்போதே பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதுடன், சிவம் துபேவுக்கு மூளை அழற்சி ஏற்பட்டு இருப்பதால் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக இது போன்ற மூளை அழற்சி ஒரு வீரருக்கு ஏற்பட்டால் அவர் பாதி போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு இணையான ஒரு வீரரை அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது.
ஆனால், முழு நேர வேகப் பந்துவீச்சாளரான ஹர்ஷித் ராணா, சிவம் துபே என்ற ஆல் ரவுண்டருக்கு மாற்றாக களமிறக்கப்பட்டது சரியா என்ற கேள்வி எழுந்தது. ஹர்ஷித் ராணா 12 வது ஓவரை வீசி ஒரு விக்கெட்டையும் சாய்த்ததுடன், அவருக்கு இதுவே அறிமுக போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.