அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இளம் வீரர்.. முகமது ஷமிக்கும் வாய்ப்பு இல்லை.. இதுதான் காரணம்!
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு அணியில் இடம் அளிக்கப்படாததுடன், சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட்
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமிக்கு அணியில் இடம் அளிக்கப்படாததுடன், சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி குல்தீப் யாதவ், திடீரென ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளமை தொடர்பில் பிசிசிஐ விளக்கம் அளித்து உள்ளது.
நீண்ட காலமாகவே குல்தீப் யாதவ் இடுப்பு பகுதியில் வலியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சை பெற பிசிசிஐ சிறப்பு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அத்துடன், மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், முகமது ஷமியை தேர்வு செய்யாதது தொடர்பில் பிசிசிஐ வாய் திறக்கவில்லை.
முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த முகமது ஷமி அண்மைகாலமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், மீண்டும் லேசான வீக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில், முழு உடற் தகுதி பெறாத முகமது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்ற நிலையில் பிசிசிஐ அவரை தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை ஆஸ்திரேலிய ஆடுகளில் இருக்கும் என்பதால் இந்திய அணியில் ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், ரிசர்வ் வீரர்களாக மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
18 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய ஆறு வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளதுடன், ரிசர்வ் வீரர்களாக முகேஷ் குமார் நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ஆகிய மூவரும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். அதிரடி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி!