அனுமதிக்க மாட்டோம்... பிசிசிஐ எடுத்துள்ள முடிவால் பொங்கி எழுந்த பாகிஸ்தான்!
இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகினால், அதனால் இந்த தொடருக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்படும்.
பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கொந்தளித்து உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்வதை 2008 ஆம் ஆண்டுக்கு பின் நிறுத்தியதுடன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை.
ஆசிய கோப்பை, உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற உலக நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதி வருகின்றன.
இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பின் ஒரு உலக அளவிலான கிரிக்கெட் தொடரை நடத்த இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ அழுத்தம் கொடுத்து இருக்கிறது.
இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கை போன்ற வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தானில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க மறுத்ததால் இந்திய அணி ஆடும் போட்டிகள் இலங்கையில் நடந்தன.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஒருவர், "சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நாட்டுக்கு வெளியே நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்தியா என்ன முடிவை எடுத்தாலும், பாகிஸ்தானில் தான் சாம்பியன்ஸ் ட்ராபி நடக்கும்" என கூறி இருக்கிறார்.
ஆனால், இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகினால், அதனால் இந்த தொடருக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்படும்.
இந்திய அணி பங்கேற்காவிட்டால் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய் போன்றவற்றில் மிகப்பெரிய இழப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சந்திக்க நேரிடும். எனவே, பிசிசிஐ என்ன நினைக்கிறதோ, அதுதான் நடக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.