வேலுகுமார்

“முற்போக்கு அரசியலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தேசியரீதியாக நிதானமான, காத்திரமான, ஆளுமையுடானான நாகரீக தலைமையை வழங்கி வருகிறார். இந்த எமது நாகரீக அரசியலை எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட நினைக்காமல், எமது காத்திரம், ஆளுமை, நேர்மை ஆகியவற்றை புரிந்துக் கொண்டு கைதட்டுங்கள். காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள். அதுவே முற்போக்கு அரசியல் சிந்தனை. இதை நான் கணபதி கனகராஜுக்கு மட்டும் கூறவில்லை. அனைத்து இதொகா அரசியல்வாதிகளுக்கும் கூறி வைக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்துக்காக என்ன செய்துள்ளது என்ற கேள்வியுடன், அதன் தலைவர் மனோ கணேசனை விமர்சித்து கணபதி கனகராஜால் விடுக்கப்பட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுத்து வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” நமது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு,இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஜேவீபி எம்பி நளினுக்கு கூறிய பதிலில் இதொகா பற்றியும் கூறிய சில கருத்துகளை கண்டு,இதொகாவின் கணபதி கனகராஜ் என்பவர் பொங்கி எழுந்து கூவியுள்ளார்.

கணபதி கனகராஜ் ஒரு பாவப்பட்ட மனிதர். அவர் வாங்கும் சம்பளத்துக்கு கூவித்தானே ஆக வேண்டும். ஆகவே அதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அவருக்கு சில விடயங்கள் விளங்க வேண்டும். முதலில், இந்த கணபதி கனகராஜ் என்ற இவர் இதொகாவுக்கு எப்போது வந்தார்? இதொகாவில் சேருமுன் மலையக மக்கள் முன்னணியில் இருந்த போது, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இருந்த போது,ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த போது, இவர் என்னவெல்லாம் சொன்னார்?

என்னவெல்லாம் செய்தார்? மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனுக்கு விசுவாசமாக,இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் சதாசிவத்துக்கு விசுவாசமாக இருந்துக்கொண்டு, இதொகா பற்றி, பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பற்றி, பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் பற்றி, ஆறுமுகன் தொண்டமான் குடும்ப உறுப்பினர்கள் பற்றி, என்னேவெல்லாம் பேசினார் என்பவற்றை இவர் சற்று மீட்டு பார்த்தால், இன்று இவர் பேசுகின்ற பலவற்றுக்கு அவையே பதில்களாக அமையும்.

கடைசியில் கணபதி கனகராஜ், இவரது அன்றைய தலைவர்கள் சந்திரசேகரன், சதாசிவம் ஆகியோருக்கும் முதுகில் குத்தினார். தனக்கு அரசியல் முகவரி கொடுத்து, தன்னை முதன் முதலில் தேசிய பட்டியலில் பெயர் இடம் பெற செய்த சந்திரசேகரனுக்கே தெரியாமல், சதாசிவத்தின் கையை பிடித்துக்கொண்டு போய் இரகசியமாக அன்றைய ஆட்சியாளருடன் கேவலமாக பேரம் பேசி, தேசிய பட்டியல் எம்பி ஆனார்.

இவர் இப்படி ஒரே ஒருமுறை பாராளுமன்ற படி ஏறியதும் கூட தனக்கு முகவரி தந்த அமரர் சந்திரசேகரனின் முதுகில் குத்தித்தான் என்பதும், பாராளுமன்ற படியில் கால் வைக்க முன்னமேயே தன் தலைவன் முதுகில் குத்திய மகா பெருமை கொண்டவர் என்பதும், மகா கணபதியின் மகா சிறப்புகள். இவை இவரது கறுப்பு பக்கங்கள். பின் சதாசிவத்துக்கும் அதே வேலையை காட்டிவிட்டு இவர் மீண்டும் கட்சி மாறினார்.

இவர் இன்று அன்று தாம் திட்டி தீர்த்த இதொகாவிலேயே அடைக்கலம் புகுந்து விட்டார். கடைசியில் இப்போது மீண்டும் கூவுகிறார். சென்று அடைக்கலம் புகுந்துள்ள இடங்களுக்கு விசுவாசமாக தொடர்ந்து கூவுவதையே முழு நேர தொழிலாக கொண்டுள்ள இவரை பற்றி தனிப்பட்ட முறையில் நாம் புதிதாக எதுவும் சொல்ல போவதில்லை.
கட்சிகளை மாற்றி, மாற்றி, தலைவர்கள் முதுகளில் ஓங்கி குத்தும் கணபதியின் கறுப்பு பக்க வரலாறு பற்றி ஆறுமுகன் தொண்டமானுக்கு நன்கு தெரியும். எனவே இவரது இந்த வரலாற்றை எப்படியாவது தொண்டமான் மறந்தால்தான், இவருக்கு எதிர்காலத்தில் தொண்டமான் ஏதாவது பார்த்து போட்டு தருவார் என்ற பரிதாப நிலைமையில் இன்று கணபதி கனகராஜு இருக்கிறார்.

ஆகவேதான், மற்றவர்கள் எல்லாம் அளவோடு கூவ,கணபதி மட்டும் கொடுத்த காசுக்கு மேலேயே இன்று கூவுகிறது. ஆகவே ரொம்ப ரொம்ப பாவம் இது! இதை விட்டு விடுங்கள்! கூவி விட்டு பிழைத்து போகட்டும்!

மற்றபடி இவரது கூவலில் இடம்பெற்ற சில கருத்துகளுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதில் இதுதான்

.தமிழ் முற்போக்கு கூட்டணியின் நான்கு வருட சாதனைகள் சிலவற்றின் பட்டியல் இதோ

தோட்டங்களில் ஏழு பேர்ச் காணி அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, காணிகள் வழங்கப்படுகின்றன.

அங்கே சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுகின்றன.

கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் இப்போது தமிழ் கிராமங்களாக மாறி வருகின்றன.

மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் மூலமான அரசியல் அதிகார பகிர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது

“கடந்த காலத்தில் மலையக மக்களால் வாக்களித்து பிரதேச சபைகளை தெரிவு செய்யும், தோட்ட புறங்களுக்கு, அந்த பிரதேச சபைகளால் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி செய்ய முடியாது” என்று இருந்த மலையக பிரதேச சபை அதிகார எல்லை சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

தோட்டபுற பாடசாலைகளுக்கு அவ்வவ் தோட்டங்களில் மேலதிக காணிகள் வழங்குதல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறுகிறது.

தோட்ட தொழிலாளர்களின் வருமானம் என்பது “கூட்டு ஒப்பந்த சம்பளம்” என்ற ஒன்றில் மாத்திரம் தங்கியிராமல், வெளிப்பயிர்செய்கை வருமான திட்டம் மூலம் படிப்படியாக அவர்களை சிறு தோட்ட உடைமையாளர் ஆக்கும் திட்டம் முன்னேடுக்கப்படுகிறது.

மலையக பல்கலைக்கழகம் பற்றிய ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறுகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணியும், இதொகவும் அரசில் இருந்த காலங்கள்

தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக 2015 வருடத்தில் இருந்தே அரசில் அமைச்சரவை அந்தஸ்துடன் இருக்கிறது. இது இதுவரை சுமார் நான்கரை வருடங்கள் ஆகும்.

இதொகா 1978 வருடத்தில் இருந்து 2015 வரை சுமார் 38வருடங்கள் ஒவ்வோர் அரசிலும் இருந்தது. எனவே ஒப்பீட்டு பார்ப்போர், பேசுவோர் முதலில் இந்த அடிப்படை கணக்கை கவனத்தில் எடுக்க வேண்டும்.

குடியுரிமை

வடக்கில் கிழக்கில் தமிழ் ஆயுத போராட்டம் நடைப்பெற்ற வேளையில் தெற்கில் வாழும் மலையக தமிழரை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவை இலங்கை ஆட்சியாளருக்கு எப்போதும் இருந்தது.

இந்நிலையில் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்துக்கொண்ட மலையக இளைஞர் அணி மலையக தமிழரின் குடியுரிமை பிரச்சினையையும் நான்கில் ஒரு கோரிக்கையாக திம்பு பேச்சுவார்த்தையில் இடம் பெற செய்தது. இந்த யதார்த்தம், அன்றைய இலங்கை ஆட்சியாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.

இதை புரிந்துக்கொண்ட இந்திய அரசும் தமது அழுத்தத்தை தந்தது. குடியுரிமையற்ற இந்திய வம்சாவளி மக்கள் என்று ஒரு பிரிவினர் இந்நாட்டில் தொடர்ந்து இருப்பது, இந்நாட்டு உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு வழியை ஏற்படுத்தும்.

ஆகவே இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து இந்தியாவை கைகழுவிவிட, இலங்கை அரசு விரும்பியதும் ஒரு காரணம். (இன்று எப்படி இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்காமல் இந்திய அரசு வைத்து இருப்பதும் இதுபோன்ற ஒரு காரணமாகத்தான்)

நவீன உலக வளர்ச்சியின் அடிப்படையில் எந்த ஒரு நாட்டிலும் “நாடற்ற” ஒரு பிரிவினர் இருக்க முடியாது. இது உலக மனித உரிமை வளர்ச்சி. போக்கு.

இதொகா மட்டுமல்ல, அனைத்து மலையக கட்சிகளும், மலையக தொழிற்சங்கங்களும், அகில இலங்கை முற்போக்கு சிங்கள கட்சிகளும் எஞ்சி இருந்த மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடாப்பிடியாக முன் வைத்தார்கள். இவையே அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் எஞ்சி இருந்த மலையக தமிழரின் குடியுரிமை வழங்கப்பட்டதன் பிரதான பின்னணி காரணங்கள் ஆகும்.

இந்த போக்கிலேயே இந்நாட்டில் குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டது. இது சிந்திக்கும் எவருக்கும் புரியும். அந்த நேரத்தில் ஆட்சியின் அங்கமாக இதொகா இருந்தது. ஆகவே அந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு தாம் மட்டுமே குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம் என காலம் காலமாக மார்தட்டுவதை இதொகா இனிமேலாவது நிறுத்த வேண்டும்.

உண்மையை சொல்லப்போனால், மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமையும் பறிக்கப்பட்ட,அந்த 1948-1950 காலகட்டங்களில் இதொகாவின் தலைமை நடந்துகொண்ட முறைமைகள் பற்றி பாரிய கடும் விமர்சனங்கள் உள்ளன. இவை அக்கால வரலாற்றை அறிந்த பலருக்கு ஞாபகம் இருக்கின்றது. இவற்றை இங்கே எடுத்து விட்டால் சந்தி சிரிக்கும் அவை இதொகாவின் கறுப்பு பக்கங்களாக மாறி விடும்.

இதொகாவின் “தோம், தோம்” பல்லவி அரசியல்

ஏழு பேர்ச் காணி சட்டமூலம், மலையக அதிகாரசபை சட்டமூலம், “தோட்டப்புறங்களுக்கு நிதி ஒதுக்க முடியாது” என 40 வருட காலமாக இருந்த கரும்புள்ளியை பிரதேச சபை சட்ட மூலத்தில் இருந்து திருத்திய சட்டமூலம்,புதிய பிரதேச சபைகள் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் அமைச்சரவையில் சமர்பிக்க செய்து, பின்னர் பாராளுமன்ற சபைக்கு கொண்டு வரச்செய்து, அவற்றை அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் ஏக மனதாக நிறைவேற்றி கொண்டது, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வெளியே இருக்கின்ற கட்சிகளையும் மதிக்கும், நாகரீகம் எம்மிடம் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கின்றது. உண்மையில், மலையகத்தில் அநாகரீக அரசியலை தோல்வியுறச்செய்து, அனைவரையும் அரவணைத்து செல்லும் நாகரீக அரசியலையே நாம் கூட்டணியாக முன்னெடுக்கின்றோம்.

ஆனால் அதேவேளை, சாதனையாளர்கள், யார்-எவர் என்பதை உலகம் அறிய வேண்டும். நாளைய வரலாறு இதை சரியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் இன்று அடுத்தடுத்து செய்துவரும் “சாதனைகள்”,அனைத்தையும், “நாம்தான் அன்றே ஆரம்பித்து வைத்தோம்”, “நாம்தான் அன்றே சிந்தித்து வைத்தோம்”, “நாம்தான் அன்றே சொல்லி வைத்தோம்” என்ற “தோம், தோம்” பல்லவி பாடும் அரசியலை இதொகா நிறுத்த வேண்டும்.

எமது முற்போக்கு அரசியலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தேசியரீதியாக நிதானமான, காத்திரமான, ஆளுமையுடானான நாகரீக தலைமையை வழங்கி வருகிறார். இந்த எமது நாகரீக அரசியலை எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட நினைக்காமல், எமது காத்திரம், ஆளுமை, நேர்மை ஆகியவற்றை புரிந்துக் கொண்டு கைதட்டுங்கள். காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள். அதுவே முற்போக்கு அரசியல் சிந்தனை. இதை நான் கணபதி கனகராஜுக்கு மட்டும் கூறவில்லை. அனைத்து இதொகா அரசியல்வாதிகளுக்கும் கூறி வைக்க விரும்புகிறேன். ” என்றுள்ளது.