தேர்தல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வேட்பாளருக்கு புள்ளடியிடும் விருப்ப வாக்கு முறை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான சுயாதீன கண்காணிப்பு அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவித்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேர்தல்கள் சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தலின்போது, நுாற்றுக்கு 50 சதவீத வாக்குகளை எந்தவொரு வேட்பாளராலும் பெற்றுக்கொள்ள முடியாதவிடத்து, இரண்டாம் விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.

எனினும், இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு தேவை ஏற்பட்டிருக்கவில்லை.

எனினும், நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இரண்டாம் மற்றும் மூன்றாம் வேட்பாளருக்கு புள்ளடியிடும் விருப்ப வாக்கு முறை தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துவது பலனளிக்கக்கூடிய ஒன்றாக காணப்படும் என, ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர, ஏனைய வேட்பாளர்கள் இணைந்து 5 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொண்டால், இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணவேண்டிய தேவை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.