என்னா அடி.. உலகக்கோப்பையில் அதிவேக சதம்.. மிரட்டல் சாதனை படைத்த மார்க்ரம்!
உலகக்கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
உலகக்கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் டி காக் - பவுமா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதன்பின் சிறப்பாக ஆடிய டி காக் 100 ரன்களும், வான்டர் டஸன் 108 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன் பின் களம் புகுந்த எய்டன் மார்க்ரம் தொடக்கம் முதலே வெளுத்து கட்டினார். 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மார்க்ரமின் ஆட்டம் அடுத்த கியருக்கு மாறியது.
குறைந்தபட்சம் ஒரு ஓவரில் 2 பவுண்டரியை விளாசி மிரட்டினார் மார்க்ரம். இதன் காரணமாக 34 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் மார்க்ரம் பேட்டை ஓங்கினாலேயே பவுண்டரி அல்லது சிக்சர் தான் என்று நிலை உருவாகியது. குறிப்பாக பதிரானா வீசிய ஒரே ஓவரில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் உட்பட 26 ரன்கள் விளாசப்பட்டது.
தொடர்ந்து சிக்ஸ், பவுண்டரி என்று விளாசிய மார்க்ரம், 46 பந்துகளில் 90 ரன்களை எட்டினார். பின்னர் மதுஷங்கா வீசிய 46வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி 49 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் மார்க்ரம் படைத்தார்.
முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அயர்லாந்து அணியின் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் விளாசினார்.
அதுவே உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையாக இருந்தது. அந்த சாதனையை எய்டன் மார்க்ரம் முறியடித்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.