2014 ஆம் ஆண்டு மேத்யூஸ் செய்த தவறு.. 9 ஆண்டுக்கு பிறகு தாக்கிய கர்மா.... அப்போதே எச்சரித்த வீரர்
பங்களாதேஷ் அணியை எவ்வளவு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு மேத்யூஸ் திட்டி விமர்சித்து விட்டார்
இன்னும் இரண்டு நாட்களுக்கு நீங்கள் இலங்கை பங்களாதேஷ் மோதிய உலக கோப்பை லீக் ஆட்டத்தை பற்றி தான் பேசுவீர்கள் என்று நேற்று காலை யாராவது நம்மிடம் சொன்னால் நிச்சயமாக யாரும் நம்பி இருக்க மாட்டோம்.
ஆனால் உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு சர்ச்சை சம்பவத்தை இந்த போட்டி ஏற்படுத்தி விட்டது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் நட்சத்திர வீரர் மேத்யூஸ் களத்திற்கு இரண்டு நிமிடம் தாமதமாக வந்தார் என்று கூறி அவரை அவுட் என்று அறிவிக்க பங்களாதேஷ் அணி கிரிக்கெட்டில் யாருமே இதுவரை பயன்படுத்தாத ஒரு விதியை பயன்படுத்தியது.
இதற்கு நடுவரும் அவுட் என வழங்கினார்கள். இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பங்களாதேஷ் அணியை எவ்வளவு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு மேத்யூஸ் திட்டி விமர்சித்து விட்டார். தரம் தாழ்ந்து விட்டார்கள், அடிப்படை அறிவு இல்லை, ஏமாற்றி விட்டார்கள், மோசமானவர்கள் என்ற பல வார்த்தையை மேத்யூஸ் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால் இதே மேத்யூஸ் 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி கேப்டனாக இருந்த போது செய்த ஒரு தவறு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடர் சமனில் இருந்த போது இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
அப்போது அதிரடி வீரர் பட்லர் பந்துவீச்சாளர் முனையில் நின்ற போது இலங்கை வீரர் சேனநாயக்கேவிடம் மான்கட் முறையில் அவுட் ஆனார். இது அஸ்வின் மான்கட் செய்வதற்கு முன்பு நடந்த சம்பவமாகும்.
அப்போது இது குறித்து யாரும் அதிகம் பேசியது கூட கிடையாது. இதனால் இந்த அவுட் முறையை இலங்கை அணி திரும்ப பெற வேண்டும் என பட்லர் முறையிட்டார்.
ஆனால் அப்போது கேப்டனாக இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ், நாங்கள் விதிப்படி தான் செய்தோம். அவுட் கேட்டதை திரும்ப பெற முடியாது என பதிலளித்தார். இதை அடுத்து அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 219 ரன்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்து தோல்வியை தழுவியது.
அப்போது கிரிக்கெட் வீரர் காலிங்வுட், மேத்யூஸ் செய்தது தவறு என்றும் இது குறித்து பின்னால் அவர் வருத்தப்படுவார் என்றும் கூறியிருந்தார். தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் மேத்தியூஸ்க்கு இது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.