ஊடக அறம், உண்மையின் நிறம்!

யாருகிட்ட.. கடைசி வரை போராடிய ஆப்கன்

Australia beat Afghanistan : ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கிண்ண தொடரின் நான்காம் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆப்கானிஸ்தான் இந்தப் போட்டியில் சுமாரான துடுப்பாட்டம், பந்துவீச்சை வெளிப்படுத்தினாலும், அனுபவம் குறைந்த அந்த அணி ஆடிய போராட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. அந்த அணியின் ஆரம்ப வீரர்கள் ஷாசாத், ஜஜாய் இருவரும் டக் அவுட் ஆனார்கள். அதன் பின் வந்த வீரர்களில் ரஹ்மத் ஷா 43, குலாபுதின் நயிப் 31, நஜிபுல்லா 51, ரஷித் கான் 27 ஓட்டங்கள் குவித்தனர். ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்த உலகக்கிண்ண தொடரில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஆசிய அணிகளைக் காட்டிலும், வேகப் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து, பேட்டிங்கில் ஓரளவு ஓட்டங்களை எடுத்தது ஆப்கன்.

ALLSO SEE: இது அவுட் தான்… ஆனா அவுட் இல்லை…!!

ஆஸ்திரேலியா அணியில் பாட் கம்மின்ஸ் 3, ஆடம் சாம்பா 3, மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 2, மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 208 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடியது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஆப்கன் அணிக்கு வாய்ப்பே கொடுக்காமல், 96 ஓட்டங்கள் சேர்த்தனர். வார்னர் வழக்கத்தை விட இன்றைய போட்டியில் நிதானமாக ஆடினார்.

பின்ச் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உஸ்மான் கவாஜா 15, ஸ்டீவ் ஸ்மித் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை களத்தில் நின்ற டேவிட் வார்னர் 89 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். 34.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா.

ஆப்கானிஸ்தான் அணியின் ஹமித் ஹாசன் அசத்தலாக பந்துவீசினார். 2 மெய்டன் ஓவர்கள் உட்பட, 6 ஓவர்கள் வீசிய அவர் 15 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். முஜீப் உர் ரஹ்மான் ஓவருக்கு 9 ஓட்டங்களுக்கு மேல் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும், மற்ற ஆசிய அணிகளை விட சிறப்பாக போராடியதைக் கூறி ரசிகர்கள் அந்த அணிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.