149 ரன்களுக்கு கவிழ்ந்த வங்கதேச அணி... ஃபாலோ ஆன் கொடுக்க ரோஹித் மறுப்பு.. காரணம் தெரியுமா?
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள், குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்தியா 227 ரன்கள் முன்னிலை பெற்றது.
முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆன பின்னர், வங்கதேசம் அணியின் தொடக்கமே அதிர்ச்சியூட்டியது. பும்ராவின் முதல் ஓவரிலேயே ஷாத்மன் இஸ்லாம் 2 ரன்களில் வெளியேற, அதன்பின் ஜாகீர் ஹசன், மோமினுல் ஹக் ஆகியோர் சென்ற வேகத்தில் திரும்ப, 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஷகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இணைந்து இந்திய அணிக்கு சவால் கொடுத்தாலும், அவர்கள் 51 ரன்களின் பார்ட்னர்ஷிப் அமைத்த பிறகு ஜடேஜா மற்றும் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் 149 ரன்களில் சுருண்டது.
வங்கதேசம் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனதால் ஃபாலோ ஆன் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபாலோ ஆன் கொடுக்க மறுத்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மேலும் பயிற்சி தேவை என்பதால் அவர்களுக்கு மேலும் பேட்டிங் செய்யும் வாய்ப்பை அளிக்க விரும்பியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.