படுமோசமான தோல்வி.. கிரிக்கெட் அமைப்பை கலைத்த இலங்கை அரசாங்கம்.. என்ன நடந்தது?
2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது இலங்கை அணி.
இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அமைப்பை கலைத்து உத்தரவிட்டுள்ளது இலங்கை அரசாங்கம்.
2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது இலங்கை அணி.
302 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது இலங்கை. இந்த படுதோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் அந்த நாட்டின் கிரிக்கெட் அமைப்பு மற்றும் அரசு மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.
கிரிக்கெட் விளையாட்டை நிர்வாக ரீதியாக சரியாக கையாளவில்லை என ரசிகர்கள் குற்றம் சுமத்தினர். இது ஒருபுறம் இருக்க, இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே - இலங்கை கிரிக்கெட் அமைப்புக்கு இடையே சில மாதங்களாக உரசல் இருந்து வருகிறது.
ரோஷன் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் அமைப்பில் ஊழல் இருப்பதாக கூறி அதை விசாரிக்க விசாரணை குழு அமைத்தார். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் அமைப்பில் அரசியல் ரீதியான விசாரணை நுழைந்தால் உறுப்பினர் பதவியை ரத்து செய்வோம் எனக் கூறியதால் விசாரணை அப்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக ஆசிய கோப்பையில் 50 ரன்களில் ஆட்டமிழந்தது, தற்போது மீண்டும் உலகக்கோப்பை தொடரில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது, உலகக்கோப்பை அரை இறுதிக்கு முன்னேறாமல் போனது என மோசமான தோல்விகளால் இலங்கை கிரிக்கெட் அமைப்பின் இரண்டாம் நிலையில் இருந்த அதிகாரி மோகன் டி சில்வா, இந்தியாவுக்கு எதிரான போட்டி முடிந்த மறுநாள் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தற்போது மொத்த இலங்கை கிரிக்கெட் அமைப்பையும் கலைத்து உத்தரவிட்டுள்ளார் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷன் ரணசிங்க. கிரிக்கெட் அமைப்புக்கு பதிலாக தற்காலிகமாக முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில், ஏழு பேர் குழுவை நியமித்துள்ளார்.