Bigg Boss 7 - கதை சொல்லி ஆட்டத்துக்குள் வந்த பவா செல்லதுரை.. எமோஷனல் ஆன கூல் சுரேஷ், பிரதீப்
Bigg Boss 7 : இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீடு என்று அழைக்கப்படும் சின்ன வீட்டுக்கு சென்றனர்.
Bigg Boss 7 : முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் 7 சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீடு என்று அழைக்கப்படும் சின்ன வீட்டுக்கு சென்றனர்.
அவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது; பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சொல்வதைத்தான் சமைக்க வேண்டும் போன்ற ரூல்ஸ்கள் போடப்பட்டிருக்கின்றன.
இரண்டு நாமினேஷன்கள்
அதேபோல் இந்த சீசனில் ஆரம்பமே இரண்டு நாமினேஷன்கள் என்று பிக்பாஸ் அறிவித்தார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களையும், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று ட்விஸ்ட் வைக்கப்பட்டது.
அதன்படி ஹவுஸ்மேட்ஸ் நாமினேஷன் செய்தனர். அதில் பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அனன்யா, ஐஷு, ஜோவிகா ஆகிய ஆறு பேர் எவிக்ஷன் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கின்றனர்.
டாஸ்க்
இதற்கிடையே பிரதீப் ஆண்டனி நாமினேஷன் செய்யும்போது தான் பவா செல்லத்துரையை நாமினேட் செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவரிடம் நிறைய கதைகளை கேட்க ஆவலோடு இருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் பவாவோ பிரதீப் ரங்கநாதனை நாமினேட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாஸ்காக ஷாப்பிங் செய்வது ஹவுஸ்மேட்ஸுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி வேண்டும் அளவுக்கு ஹவுஸ்மேட்ஸ் ஷாப்பிங் செய்துகொள்ளலாம் என்றும் அதற்கான பணத்தை இந்த வாரத்தில் மூன்று டாஸ்க்குகளை வென்று செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வீட்டில் இருப்பவர்கள் மொத்தம் 54,000 ரூபாய்வரை ஷாப்பிங் செய்திருந்தனர். பிறகு ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைத்தனர்.
கதை சொல்லி பவா
சமையல் அனைத்தையும் முடித்துவிட்டு பவா செல்லத்துரை வீட்டுக்கு வெளியே அனைவரையும் அமரவைத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர், "கமல் என்னை அறிமுகப்படுத்தும்போது நீங்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்வரை கதை சொல்ல வேண்டும் என்று கேட்டார்.
நான் இப்போது ஆதவன் எழுதிய ஓட்டம் என்ற கதையை சொல்கிறேன். டெல்லியில் ஒரு மிடில் கிளாஸ் அம்மா இருப்பாங்க. அவங்களுக்கு ஒரு மகன் இருப்பான். ஒருநாள் அந்த மகன் டிபன் பாக்ஸை மறந்து வீட்டில் வைத்துவிட்டு ஸ்கூல் வேனுக்கு சென்று விடுவான்.
அதனை கவனித்த அந்த அம்மா யாரை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படாமல் ஓட்டமாய் ஓடி டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடந்துவருவார். அப்போது எல்லோரும் அந்த அம்மாவ பார்ப்பார்கள். இவர் அதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.
உடனே இவருக்கு ஒரு நினைவு வரும்; அதாவது அந்த அம்மா தன்னுடைய பள்ளி, கல்லூரி காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடத்தை தொடர்ச்சியாக பெற்றவர். அதை நினைத்து இவருக்கு ஒரே சந்தோஷமாக இருக்கும்.
அடுத்த நாளும் மகன் டிபன் பாக்ஸை மறந்துவிட்டு செல்வான். அதை கவனித்த அந்த அம்மாவுக்கு; இன்றும் மறந்துவிட்டான் நாம் ஓடிப்போய் கொடுக்கலாம் என்று உற்சாகமாக இருக்கும். ஆனால் போன மகன் சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வந்து டிபன் பாக்ஸை மறந்துவிட்டேன் என்று சொல்வான்.
அந்த அம்மாவுக்கு உற்சாகம் எல்லாம் காணாமல் போய்விடும். உடனே அந்த மகன் தலையை கோதி நீ தினமும் டிபன் பாக்ஸை மறந்துவிட்டு போ. நான் ஓடி வந்து வேனில் கொடுக்கிறேன் என்று சொல்வார். அந்தக் கதை எனக்கு முக்கியமாக பட்டது.
இதனால் உங்கள் யாரையும் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. நாம் எல்லோரும் கலையோடு சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் குடும்பம் என்ற அன்பின் வன்முறை தடுத்து வைத்திருக்கிறது.
எனவே கணவனோ, மனைவியோ, குழந்தையோ நம் பின்னால் நிற்க வேண்டும். தடையாக நிற்கக்கூடாது என்ற எண்ணத்தோடு தொடர்ந்து ஓட வேண்டும்" என்று முடித்தார்.
பவா செல்லதுரை கதையை சொல்லி முடித்ததும் பிரதீப் ஆண்டனியும், கூல் சுரேஷும் எமோஷனல் ஆகிவிட்டனர். மேலும் பவா தொடர்ந்து வீட்டுக்குள் இருந்தால் இதுபோன்ற சிறந்த கதைகளை ரசிகர்களும் கேட்கலாம்.