இனி இப்படித்தான் இருக்கணும்... இல்லைனா அணிய விட்டு போங்க: கோலி, ரோஹித், பும்ராவுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!
அனைத்து வீரர்களும் இனி ஒரே வாகனத்தில்தான் பயணிக்க வேண்டும். வெளிநாட்டு தொடர்களுக்கு செல்லும்போது, ஒரே விமானத்தில்தான் செல்ல வேண்டும்.
விராட் கோலி, ஜஸ்பரீத் பும்ரா ஆகியோரின் செயலால் பிசிசிஐ அதிப்தி அடைந்துள்ளதுடன், புது விதிமுறையை வகுத்து, அதன்படி மட்டுமே செயல்பட வேண்டும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்திய அணிக்கு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, கேப்டன் விராட் கோலி, எப்போதும் சக வீரர்களுடன் பயணம் செய்ய மாட்டார். வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு செல்லும்போது, பெரும்பாலான நேரங்களில் தனி விமானத்தில்தான் செல்வார்.
போட்டிக்காக விடுதியில் இருந்து வீரர்கள் பேருந்தில் சென்றால், கோலி தனி வாகனத்தில்தான் செல்வார். இதனை அப்போதைய இந்திய அணி பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளே தட்டிக்கேட்டதால், கோலிக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இறுதியில், கும்ளேவை அணியைவிட்டு தூக்கிவிட்டார்கள்.
கோலியை தொடர்ந்து, ரோஹித் சர்மாவும் இதனை கடைபிடித்த நிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது ஜஸ்பரீத் பும்ராவும் வீரர்களுடன் பயணிக்காமல், தனி வாகனத்தில் செல்ல ஆரம்பித்தார்.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் கேட்டுக் கொண்டதின் பேரில், பிசிசிஐ ஒரு அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.
அனைத்து வீரர்களும் இனி ஒரே வாகனத்தில்தான் பயணிக்க வேண்டும். வெளிநாட்டு தொடர்களுக்கு செல்லும்போது, ஒரே விமானத்தில்தான் செல்ல வேண்டும். போட்டிக்காக பேருந்தில் செல்லும்போதும் அனைத்து வீரர்களும் ஒரே வாகனத்தில்தான் பயணிக்க வேண்டும்.
மேலும், 45 நாட்கள் நடைபெறும் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட டெஸ்ட் தொடர்களின்போது, குடும்ப உறுப்பினர்களுடன் 2 வாரங்கள் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப்படும். சில காலங்களில் முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வீரர்களும் இனி சமமாக மதிக்கப்படுவார்கள். பிசிசிஐ ஒதுக்கும் அறைகளில்தான் வீரர்கள் தங்கியிருக்க வேண்டும். கிரிக்கெட் தொடரில் இடம்பெறும் வீரர்கள், அணிக்குள் வந்தப் பிறகு, பிசிசிஐ என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் செய்ய வேண்டும்.
உள்ளூர் தொடர்களில் ஆடச் சொன்னால், ஒரு வீரர், உடல்நலப் பிரச்சினை தவிர்த்து எந்த காரணத்தையும் கூறி விலகக் கூடாது. மேல்குறிப்பிட்ட இந்த விதிமுறைகளை பின்பற்ற மறுத்தால், இந்திய அணியில் ஒரு வருடம் வரை தடை விதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில், வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால்தான், அவர்கள் கவனக்குறைவாக விளையாடி, தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்தனர் என கம்பீர் அறிக்கை அளித்தப் பிறகுதான், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.