வெற்றியே பெறாத பாகிஸ்தானுக்கு பெரிய பரிசுத் தொகை.. ஏன் தெரியுமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் பரிசுத்தொகை முன்பே உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் முன்பே ஏற்படுத்தப்பட்டு விட்டது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் அணி தொடரின் முடிவில் கோடிக்கணக்கான ரூபாயை பரிசாகப் பெற உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் அணியாக இந்த முறை குரூப் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடி குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது.
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததுடன், வங்கதேச அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
அதனால், ஒரு புள்ளி மட்டுமே பாகிஸ்தானுக்கு கிடைத்தது. ஆக மொத்தத்தில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட அந்த அணி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு 2.31 கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் பரிசுத்தொகை முன்பே உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் முன்பே ஏற்படுத்தப்பட்டு விட்டது.
இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளுக்கும் பங்கேற்புத் தொகையாக ரூபாய் 1.09 கோடி வழங்கப்பட உள்ளதுடன், குரூப் ஏ பிரிவில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு அந்தப் பங்கேற்புத் தொகை வழங்கப்பட உள்ளது.
அத்துடன், இந்தத் தொடரில் இரண்டு குரூப் பிரிவுகளின் புள்ளிப் பட்டியலை சேர்த்து ஒட்டுமொத்தமாக ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இந்திய மதிப்புப்படி ரூபாய் 1.22 கோடி வழங்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பெற்றாலும், குறைந்தபட்சம் 2.31 கோடி என்ற பரிசுத்தொகையை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பெற உள்ளன.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒட்டுமொத்தமாக 60.25 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதுடன், இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெற்றி பெறும் அணிக்கு அதிகபட்சமாக 19.56 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இரண்டாவதாக வரும் அணிக்கு 9.78 கோடி ரூபாய் வழங்கப்படுவதுடன், அரையிறுதியில் தோல்வியடைந்த இரண்டு அணிகளுக்கு 4.89 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இவை தவிர, அந்த அணிகள் அனைத்துக்கும் பங்கேற்புத் தொகையான 1.09 கோடி ரூபாயும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.