சாம்பியன்ஸ் டிராபி கனவு - விராட் கோலிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மீண்டும் விளையாடுவது மிகவும் கடினம் என்பதால், அவரது சாதனைகளை புதிய வீரர்கள் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கனவு - விராட் கோலிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால், கோலி வெறும் 1 ரன்னில் வெளியேறினார், இதனால் அவரது தங்க பேட் கனவு நழுவிப் போயுள்ளது.

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 251 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கெதிராக இந்த இலக்கை நிலைநாட்டும் வகையில், கேப்டன் ரோகித் சர்மா (76 ரன், 83 பந்துகளில்) மற்றும் ஷுப்மன் கில் (31 ரன், 50 பந்துகளில்) முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். இவர்களின் சிறப்பான தொடக்கத்துக்கு பிறகு, விராட் கோலி களமிறங்கினார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த விராட் கோலி, யாரும் எதிர்பாராத வகையில் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், அவர் சாம்பியன்ஸ் டிராபியில் தங்க பேட் (Golden Bat) வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டார். தற்போதைய சாம்பியன்ஸ் டிராபியில் ரச்சின் ரவீந்திரா 263 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 218 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில், கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 746 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் 46 ரன்கள் எடுத்திருந்தால் கோலி முதலிடத்தை பிடித்திருக்கலாம். ஆனால் வெறும் 1 ரன்னில் வெளியேறியதால், அவரது இந்த சாதனை கை நழுவிவிட்டது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மீண்டும் விளையாடுவது மிகவும் கடினம் என்பதால், அவரது சாதனைகளை புதிய வீரர்கள் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர்.