இலங்கையிடம் சுருண்ட உலக சாம்பியன் ஆஸ்திரேலியா.. 165 ரன்களில் இலங்கை வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி 165 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி 165 ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதுடன், இரண்டு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது.
கொழும்பில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் இளம் பவுலர்கள் களமிறங்கி அபாரமாக செயல்பட்டனர்.
நாதன் எல்லீஸ் 9 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணியின் முன் வரிசை வீரர்கள் நிஷாங்க, பெர்னான்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டீஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் அசலங்கா தனி ஆளாக நின்று அதிரடியாக விளையாடி 127 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் இலங்கை அணி 214 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா.
இளம் வீரர்கள் ஜேக் பிரஷர், இரண்டு ரன்களிலும், கூப்பர் 3 ரன்களிலும் ஆட்டம் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மித் 12 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் 15 ரன்களிலும் வெளியேறினர்.
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 42 ரன்கள் சேர்க்க அருண் ஹார்டி 32 ரன்கள் எடுக்க இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலிய அணி 33.5 ஓவர்களில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து தோல்வியை தழுவியது. மகிஷ் தீக்சனா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.