வெற்றிக்கு அருகில் வந்து தோற்றோம்.. அதுதான் வலிக்கின்றது... நியூசிலாந்து அணி கேப்டன் சோகம்!
உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்துல் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்துல் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 109 ரன்களும், வார்னர் 81 ரன்களும் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 383 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 13 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்தது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலிய அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியும் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதனால் அரையிறுதி சுற்றுக்கான ரேஸில் எந்த அணி முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பேசுகையில், 100 ஓவர்களும் மிகச்சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. நிச்சயம் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும் போது மனது வலிக்கும்.
ஆனாலும் இது சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. தொடக்கத்திலேயே அட்டாக் செய்து ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை சோதித்தனர். இதனால் அவர்களின் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.
அதிக அழுத்தம் இருந்த நேரத்தில் கிளென் பிலிப்ஸ் பவுலிங் செய்ய வந்தார். அந்த நேரத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. நிச்சயம் பயிற்சி செய்து அதற்கான பலன் கிடைக்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது.
பேட்டிங்கில் தொடக்க வீரர்களும், ரச்சின் ரவீந்திரா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்கள் வீரர்களின் ஆட்டம் குறித்து பெருமையாக உள்ளது. தரம்சாலா மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.