நடிகர் – யோகிபாபு
நடிகை – ஜனனி ஐயர்
இயக்குனர் – முத்துகுமரன்
இசை- ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு-மகேஷ் முத்துசாமி

எமலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்து வருகிறார் ராதாரவி. இவரது மனைவி ரேகா. ராதாரவிக்கு வயதாகிவிட்டதால் தன் அரியணையும், ஆட்சியையும் யாருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறார். சித்திரகுப்தராக இருக்கும் ரமேஷ் திலக், எமலோக பதவிக்கு ஆசைப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ராதாரவி தன்னுடைய மகனான யோகி பாபுவை அரசனாக்கி விடுகிறார். இதனால் கோபமடையும் ரமேஷ் திலக், சிவனாக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் முறையிடுகிறார். யோகி பாபு தவறு செய்தால் அவரை மாற்றிவிட்டு உன்னை அரியணையில் அமர வைக்கிறேன் என்று கூறுகிறார் மொட்டை ராஜேந்திரன்.

யோகிபாபுவை ஏதாவது தவறு செய்ய வைத்து சிக்க வைப்பதற்காக அவரை பூலோகம் அழைத்து செல்கிறார் ரமேஷ் திலக். எதிர்பார்த்தபடி ஒரு தவறில் யோகிபாபு சிக்க, எமலோக பதவிக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இறுதியில் யோகிபாபு எமலோக பதவியை தக்க வைத்தாரா? ரமேஷ் திலக்கின் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கம் போல அவரின் காமெடி கவுண்டர்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

படம் முழுக்க அவருடன் பயணிக்கிறார் ரமேஷ் திலக். இவர்கள் கூட்டணி செட்டாகிவிட்டது என்றே சொல்லலாம். மந்திரி சபை என்ற பெயரில் கணேஷ் செய்யும் லூட்டிகள் கலகலப்பு. ராதா ரவி, ரேகா ஆகியோருக்கு சில காட்சிகள் தான். ஆனால், வாரிசு அரசியலை விமர்சிக்கும் விதமாக இவர்கள் வரும் காட்சிகள் விசில் பறக்கிறது. சிவபெருமானாக வரும் மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல தன் ஸ்டைலில் கலக்கி இருக்கிறார்.

யோகிபாபுவை வைத்து காமெடி படம் மட்டும் கொடுக்காமல், சமூக அக்கறையுள்ள கருத்துகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் முத்துகுமரன். இதில் விவசாயம், ஜாதி அரசியல், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, பெரியார், காந்தி, நேதாஜி உள்ளிட்ட முன்னாள் அரசியல் தலைவர்களை பற்றி பேசியிருக்கிறார்கள். தற்போதைய சமூக பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் விதம் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு.

மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘தர்மபிரபு’ எமலோக கிங்.