கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘அர்ஜூன்ரெட்டி’ படத்தின் ரீமேக் படமான ‘ஆதித்யவர்மா’ என்ற படத்தில் சீயான் விக்ரம் மகன் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் வெள்ளியன்று வெளியாகவிருப்பதாகவும் இந்த பாடலை பாடியது மற்றும் ராப் பகுதியை எழுதியதும் துருவ் விக்ரம் தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் படத்திலேயே துருவ் விக்ரம் பாடகராகவும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விக்ரமும் ஒரு நல்ல பாடகர் என்பது தெரிந்ததே.

துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்த படத்தை கிரிசய்யா இயக்கி வருகிறார்.

ராதன் இசையில் ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை ஏற்கனவே ‘வர்மா’ என்ற பெயரில் இயக்குனர் பாலா இயக்கினார் என்பதும் அந்த படம் ரிலீஸ் செய்யப்படாமல் கைவிடப்பட்டு மீண்டும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.