மீண்டும் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்!
வீட்டுப்பாவணையின் 0 முதல் 30 அலகுகளுக்கான மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படும் எனவும், ஒரு அலகிற்கு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது. அதன்படி 14.2 வீதத்தால் இவ்வாறு மின் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, வீட்டுப்பாவணையின் 0 முதல் 30 அலகுகளுக்கான மாதாந்திர நுகர்வு கட்டணம் 65 சதவீதம் குறைக்கப்படும் எனவும், ஒரு அலகிற்கு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாய் வரை குறைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் தற்போது மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின்கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று குறித்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி பொதுமக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களின் வாய்மூலம் கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக கட்டண திருத்தம் என்ற போதும் 6 மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், வருடத்துக்கு இரு முறை மின் கட்டணத்தை திருத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
எனவே இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்றும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேநேரம் உத்தேச மின் கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.
தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.