உள்ளூர் போட்டியில் விளையாடுவது கட்டாயம்; கோலி, ரோகித் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஆப்பு வைத்த கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் சீனியர் வீரர்களுக்கு ஒரு பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி பும்ரா போன்ற வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் பங்கேற்று டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பிசிசிஐ யிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் சில தொடர்களில் பங்கேற்காமல் தங்களுக்கு ஓய்வு கிடைத்தால் வெளிநாட்டில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வந்துள்ள கம்பீர் சீனியர் வீரர்களுக்கு ஒரு பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார்.
அதாவது, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தாங்கள் விளையாட போவதில்லை என விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா பும்ரா போன்ற வீரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளதால் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று சீனியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த சூழலில் அவர்கள் கூறியதை அவர்களுக்கு எதிராக கம்பீர் திருப்பி விட்டார். அதாவது, தற்போது பிசிசிஐயால் நடத்தப்படும் துலீப் கோப்பை என்ற உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சீனியர் வீரர்கள் விளையாட வேண்டும் என்று கம்பீர் பிசிசிஐயிடம் கோரி உள்ளார்.
ஏற்கெனவே பிசிசிஐயால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் வீரர்கள் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ரஞ்சிப் போட்டிகளில் பங்கேற்காத ஸ்ரேயாஸ், இசான் கிஷன் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்த சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி பும்ரா போன்ற வீரர்கள் துலீப் கோப்பை தொடரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்த தொடரில் பங்கேற்க மாட்டேன் என சீனியர் வீரர்கள் சொன்னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர வீரர்கள் கூட தங்கள் நாட்டின் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் தான் ஐபிஎல் தொடரை தவிர வேறு எந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சீனியர் வீரர்கள் பங்கேற்பதில்லை.
இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கம்பீர் காய் நகர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.