மீண்டும் BCCI ஒப்பந்தப் பட்டியலில் இடம்... ரவி சாஸ்திரி பாராட்டு!
ஷ்ரேயாஸ் அய்யரின் டெக்னிக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார் என ரவி சாஸ்திரி கூறினார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் BCCI-வின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றமைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாததால், இருவரும் கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டனர். ஆனால், 2024/25 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் அவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
"அணி நிர்வாகம் மற்றும் வீரர்களுக்கிடையே நடந்த விவாதத்திற்குப் பிறகு, இறுதியில் சிக்கல் தீர்ந்தது. இருவரும் தங்கள் ஒப்பந்தங்களை மீண்டும் பெற்றுள்ளனர். முக்கியமாக, ஷ்ரேயாஸ் அய்யர், கடந்த 18 மாதங்களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அருமையாக விளையாடியுள்ளார். அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் 243 ரன்கள் எடுத்து, அணியின் நம்பிக்கைக்குரிய நம்பர் 4 பேட்ஸ்மனாக தன்னை நிலைநாட்டியுள்ளார்" என்று சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஷ்ரேயாஸ் அய்யரின் டெக்னிக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார் என ரவி சாஸ்திரி கூறினார்.
"முன்பு அவர் லெக் சைடுக்கு அதிகம் சாய்ந்து, பின் பக்கமாக நகர்ந்து பேட்டிங் செய்தார். ஆனால் இப்போது அவர் நேராக நின்று, பின் மற்றும் குறுக்கே நகரும் போதே பேட்டை உயர்த்துகிறார். இதனால், அவரால் இரு பக்கமும் ஷாட்கள் அடிக்க முடிகிறது. இந்த மாற்றம் அவரது விளையாட்டை முழுமையாக மாற்றியுள்ளது" என்றார்.
இதேவேளை, தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக IPL-ல் விளையாடி வரும் ஷ்ரேயாஸ், 8 போட்டிகளில் 263 ரன்கள் (சராசரி 43.83) எடுத்துள்ளார்.