Sri Lanka 24 Hours Online Breaking News

ஆயிரம் மலர்களே மலருங்கள்… மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம்..!

0

Golden Memories Ilayaraja and Kannadasan Worked Together

இந்த பிரபஞ்சத்தில் காதல் மட்டும்தான் எப்போதும் புதிதாக இருக்கிறது. எந்த காலத்தின் காதலர்களுக்கும் பொதுவாக இருப்பது ஒரே ஒரு பாடல் தான். அது ‘ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்…’என்ற பாடல்தான்.

காலம் நவீன மயமமானபிறகும் ,காற்றெல்லாம் மின் மயமானாலும் கூட ஒரு பாடல் அதே நவீன இசைக்கருவியால் இசைத்து ரசிக்கப்படுவது இந்த பாடலாகதான் இருக்கும்.

கோடிகளை கொட்டியிறைத்து பாடல் படப்பிடிப்பில் அசத்தும் அருள் சரவணன்

1979-ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தின்பாடல் இது. இந்த பாடலுக்காக இளையராஜா ட்யூன் போட்டு முடித்த போது இந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசனை வைத்து எழுதலாம் என்று முடிவு செய்திருந்தார்.

ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. கண்ணதாசன் காலையில் பத்து மணிக்கு எழுந்துதான் பழக்கம். இளையராஜா காலையில் ஆறு மணிக்கே ஸ்டுடியோவுக்கு வந்து வேலைகளை ஆரம்பித்துவிடுவார்.

பிரியா வாரியர் கண்ணடித்தது தவறு அல்ல: நீதிமன்றம் தீர்ப்பு

கவியரசரை காலையில் ஏழு மணிக்கு ஸ்டுடியோவிற்கு வரச்சொல்வது என்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த ராஜா, நேரே கவிஞரிடமே கேட்டு விட்டார். “அண்ணா நாளைக்கு ஒரு நாள் மட்டும் காலையில் ஏழு மணிக்கு பாடல் எழுத வரமுடியுமா” என்று கேட்டவுடன் கண்ணதாசன் பதட்டமாக “ஏன் ராஜா ஏன் அவ்வளவு காலையில..”என்று கேட்க, “பாடல் கம்போசிங்கை முடித்து விட்டு எனக்கு பேக் ரவுண்ட் மியூசிக் வேலைகள் இருக்கிறதண்ணா” என்று கூறியிருக்கிறார்.

இதனால் கவிஞர் மறுநாள் காலையிலேயே ஒலிப்பதிவு கூடத்திற்கு வந்து விட்டார். இது போல் கவிஞர் அதிகாலையில் வேறு யாருக்காகவும் பாட்டு எழுத போனது இல்லை. இளையராஜாவுக்காகதான் வந்திருந்தார்.

வந்தவர் ஸ்டுடியோவுக்கு வெளியிலேயே சிகரெட் பிடித்துக்கொண்டு நின்றிருக்கிறார். ராஜாவிற்கு பாடலை வேகமாக முடிக்க வேண்டும் என்ற பதட்டம். கவிஞரிடம் தயங்கியபடியே அவசரத்தைக்கூற, “ எழுதிக்கோ..”என்று மள மளவென்று வார்த்தையாக சொல்ல ஆரம்பிக்கிறார்.

கவிஞர் பத்து நிமிடத்திற்குள் பாடல் எழுதிய அனுபவத்தை இளையராஜா கூறும் போது, “கவிஞரிடம் பாடலின் சூழலை எழுதி வாங்குவதற்குள் நமக்கு கோபம் வந்து விடும். பாடல் எழுத உட்காரும்போது நண்பர்களுடன் பேசுவதும் சிகரெட் பிடிப்பதுமாக நேரம் போகும். ஆனால் டியுனை சொல்லி விட்டால் அடுத்த நொடி மளமளவென்று வார்த்தைகள் வந்து விழும். அப்படி பாட்டு சொல்ல உலகத்தில் வேறு யாராலும் முடியாது.

இந்தப்பாடல் உருவனபோது காலை ஏழு மணி. பாரதிராஜா கதையின் சூழலைச்சொன்னவுடன் நான் டியூனை போட்டு வைத்திருந்தேன். கவிஞர் வந்தார். பாரதிராஜா சூழலை சொல்ல, நான் டியூனை வாசித்துக்காட்டினேன்.

Golden Memories Ilayaraja and Kannadasan Worked Together
“இன்னொரு முறை வாசி..” என்றார். வாசித்தேன். உடனே “ஆயிரம் மலர்களே மலருங்கள்..” என்று வார்த்தையாக சொன்னார்.

இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே ஸ்வரத்தைத்தான் கொண்டிருக்கிறது. அதாவது ‘நிஸஸஸ ..நிஸஸஸ நிஸஸஸ. என்பதுதான் ஸ்வரம் ஆனால் வார்த்தைகளும் அப்படி வரவில்லை. சந்தமும் அப்படி வரவில்லை. நான் தொடங்கும்போது தானன்னா என்றுதான் தொடங்குகிறேன். நிஸஸ ஸா என்று தொடங்கவில்லை. அது ஸ்வரமாக இருக்கலாம் ஆனால் நான் னானன்னா..னன னன்னா னன னன்னா.. என்று சொல்கிறேன். இந்த நுட்பத்தை புரிந்து கொண்ட கவிஞர்

‘ஆயிரம்..மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்..பாடுங்கள்
காதல் தேவன் காவியம்
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்..”

என்று தொடங்கி எழுதுகிறார். கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி வரிகளை கொட்டுகிறாரே என்று எனக்கு ஆச்சரியம். துண்டு துண்டாக டியூனைச்சொல்லி பாடலை எழுதினாலும் பாடலின் கன்டினியூடி சிதையாமல் சொல்லி முடிக்கிறார் பாருங்கள் இது உலகத்தில் வேறு எந்த கவிஞனுக்கும் இல்லாத திறமை.

அதோடு கடைசி வரை பாடலின் இலக்கியதரமும் கதாபாத்திரங்களின் உணர்வும் தன்னுடைய தத்துவமும் பாடலில் வருவது போலவே எழுதி முடித்திருப்பதுதான் ஆச்சரியம்.” என்று சிலிர்த்துப்போய் சொல்கிறார் ராஜா.

ஆயிரம் மலர்களே மலருங்கள்

மகிழ்ச்சியும், சோகம் இழையோடும் இந்த சூழலுக்கு முதல் சரணத்தில்

‘வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
என் பாட்டும் உன் பாட்டும் ஒன்றல்லவோ..’
என்று இதயங்களின் நெருக்கத்தை பாடும் கவிஞர் அடுத்த சரணத்தில்

‘கோடையில் மழைவரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ
காலதேவன் சொல்லும் பூர்வஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..

என்று கவிஞர் காதல் பாடலுக்குள் தத்துவத்தை வைத்திருப்பார். காரணம் முதலில் ரதியோடு காதல் நிறைவேறாமல் போவதும், பிறகு ராதிகாவுடன் காதல் உருவாவதுமாக இரண்டு சூழலை ஒரே பாட்டில் இருப்பது போல் கதைச்சூழல் வைந்திருந்தார் பாரதிராஜா.

இதை எடிட்டிங் மூலம், இரண்டாவது சரணம் வரும் போது ராதிகாவின் காட்சியை இயக்குநர் பாரதிராஜா திரையில் காட்டுவார். பாடலில் நடிப்பது என்னவோ ரதிதான். ஆனால் ராதிகாவின் மன உணர்வையும் பிரதிபலிக்கும் விதமாக பாடல் இருக்கவேண்டும் அதனால்தான் இரு காதலிகளுக்கும் பொருந்தும் விதமாக பாடலை எழுதிக்கொடுத்திருந்தார் கவிஞர்.

இது கவியரசருக்கு மட்டுமே உள்ளஆளுமை. இப்படி ஒரு மாயஜாலம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரும் முன்பே பாடலின் இடையிசை நம்மை காற்றில் பறக்க வைத்துவிடும்.

முதல் சரணத்தில் ரதி பாடும் போது வயலின் மகிழ்ச்சியாக ஒலிக்கும் கூடவே குழலிசையும் நம்மை சிலிர்க்க வைக்கும் அதே குறிப்புகளை இரண்டாவது சரணத்தில் பேஸ் கிடார் மூலம் வாசித்து நம் அடி நெஞ்சில் காதல் வலியை கொடுக்க வைத்து நெகிழ வைத்திருப்பார் ராகதேவன்.

கவிஞர் தன் பங்கிற்கு காதலன் பாடுவதாக சொன்ன வரிகள் ஏகாந்தமான சூழலை நமக்கு சொல்லும்.

‘பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலைகள் மீது ரதி உலாவும் நேரமே
சாயாத குன்றும் தாளாத நெஞ்சம்
தாலாட்டுப்பாடாமல் தாயாகுமோ..’
என்று எழுதியிருப்பார்.

பாடலின் தொடகத்தில் வரும் ஷைலஜாவின் குரலில் மெல்லிய சோகம் படர்ந்து காற்றில் பரவும் போதே இது காதலர்களின் கண்ணீர் காவியத்தை விவரிக்கப்போகிறது என்பதை நம் மூளை புரிந்து தயாராகி விடுகிறது. திரையில் இந்த பாடல் ஒலிப்பதற்கு முன்புவரை நாம் பார்த்த நாயகன் விஜயனும் ராதிகாவும் அமர்ந்திருந்த காட்சி, வெகு எளிமையாக தோன்றும். ஆனால் இந்த பாடல் ஒலித்த பிறகு ஒரு தனித்தனமையை பெற்று விடுவதை காண முடிகிறது.

‘காதல் தேவனின் காவியம் நீங்களா… இல்லை நாங்களா என்று அருகில் வந்து சொல்லுங்கள்…’ என மலர்களைப் பார்த்து காதலர்கள் கேட்பதாக கவிஞர் வடித்திருப்பது காதலின் வலிமையையும், அந்த காதல் நிறைவேறாமல் போனதன் கேள்வியையும் நமக்கு முன்னே வைக்கிறது.

பாடலின் ஊடே ஒலிக்கும் கிடாரின் சொடுக்கும், வயலின் இசையின் பிரவாகமும் நம் இதயமெல்லாம் காதலை பூசிச்செல்வது போல் செய்திருப்பதுதான் இளையராஜாவின் நுட்பம்.

நம் நெஞ்சில் காதலை பூசுவதற்கு முன்பே அவர் அதை தன் நெஞ்சில் பூசிக்கொண்டு இசைத்ததால்தான் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்..’ பாடல் இன்னும் காதல் வாசத்தோடு காற்றெல்லாம் பரவிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும். இந்த பாடலின் படப்பிடிப்பைக் கொடைக்கானலில் வைத்துக்கொள்ளலாம் என்று இயக்குனர் பாரதிராஜா முடிவெடுக்க, யூனிட் முழுவதும் கொடைக்கானலுக்கு புறப்பட்டு போயிருக்கிறார்கள்.

அங்கு போன பிறகுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கொடைக்கானலில் சீசன் இல்லாததால் பூக்கள் மொத்தமும் உதிர்ந்து போயிருந்ததன. எங்கு பார்த்தாலும் இலைகளும் வறட்சியான சூழலுமாக காணப்பட்டது.

பாடலின் வரிகள் பூக்களைப் பார்த்து படிப்பதாக இருக்கும் போது, பூக்களே இல்லாமல் எப்படி பாடலை எடுப்பது? பாரதிராஜா மூட் அவுட். அப்போது உதவி இயக்குநர்கள் சிலர் ஒரு ஐடியா சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு சொந்தமான பிரம்மாண்டமான பங்களா ஒன்று கொடைக்கானலில் இருக்கிறது. அந்நாளில் பெரிய ஆடம்பரமான பங்களாவாக இருந்தது. ஜெமினி கணேசன் ரசனையுள்ளவர் என்பதால், எல்லா காலங்களிலும் பூக்கக் கூடிய பல்வேறு வகையான பூக்களை எங்கிருந்தோ கொண்டு வந்து தொட்டிகளில் வளர்த்து வந்திருக்கிறார். அந்தக் கால சூழலிலும் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த பூச்செடிகள் மிகவும் அழகாக பூத்துக் குலுங்கியபடி இருந்திருக்கிறது.

இந்த தகவலை பாரதிராஜாவிடம் சொன்னதும் உற்சாகமாகி அங்கிருந்து சென்னைக்கு ட்ரங்கால் போட்டு ஜெமினி கணேசனுடன் பேசியிருக்கிறார் பாரதிராஜா. அங்கிருக்கும் பூந்தொட்டிகளை படப்பிடிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் சரி என்று சொல்ல ஒவ்வொரு பூந்தொட்டிகளையும் எடுத்து வந்து யூனிட்டில் இருந்தவர்கள் உதவி இயக்குநர்கள் ஆகியோர் தலையில் சுமந்தபடி செடிகளுக்கு கீழே நின்றிருக்கிறார்கள்.

அவர்களின் தலைகள் காமிராவுக்குள் வராத மாதிரி மேடான பகுதியில் ட்ராலி போடப்பட்டு கேமராவை வைத்து படமாக்கியிருக்கிறார் பாரதிராஜா. பாடலில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பூச்செடிகளுக்கும் கீழ் வேர்களைவிட வியர்வைதான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள மீண்டும் ஒரு முறை பாடலைப் பாருங்கள்… உங்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுக்கும்.

Tamil News App உடனுக்குடன் செய்திகளை உங்களது கொழும்பு தமிழ் செயலியில் நொடியில் பார்க்கலாம்

Tamil Gossip News | Tamil Online Radios | Sri Lanka News in Tamil | Cinema News in Tamil | Trending Tamil Videos | The Movie Database | Tamil Songs Lyrics | News App Facebook | Twitter | Instagram

Get real time updates directly on you device, subscribe now.

You might also like