சினிமாவிமர்சனம்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ விமர்சனம்

நடிகர்-சிவகார்த்திகேயன்
நடிகை-கல்யாணி பிரியதர்ஷன்
இயக்குனர்-பி.எஸ்.மித்ரன்
இசை-யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு-ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

நாயகன் சிவகார்த்திகேயன், சிறுவயதில் சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை பார்த்துவிட்டு, எதிர்காலத்தில் தானும் ஒரு சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். தன்னை சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்து விபரீத முடிவு ஒன்றை எடுக்கிறார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் அவரிடம், சூப்பர் ஹீரோ என்பது கற்பனை தான், நம்ம பிரச்சனையை நாம தான் பாத்துக்கணும் என அவரது தந்தை அட்வைஸ் பண்ணி புரிய வைக்கிறார்.

சிவகார்த்திகேயன், பெரியவன் ஆனதும் பிரிண்டிங் பிரஸ் ஒன்றை நடத்துகிறார். அதில் போலி சான்றிதழ்கள் அடித்து கொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரின் பகுதியில் வசித்து வரும் இவானா எனும் இளம்பெண், அர்ஜுன் மறைமுகமாக நடத்தி வரும் பள்ளியில் படிக்கிறார்.

திறமை இருந்தும் பெயில் ஆன மாணவர்களை எல்லாம் ஒன்று திரட்டி அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளியுலகிற்கு கொண்டு வருவதே அர்ஜுனின் நோக்கம். அந்த வகையில் இவானா, ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரின் ஆசையை அர்ஜுனுக்கு தெரியாமல் சிவகார்த்திகேயன் நிறைவேற்றி விடுகிறார்.

Hero Movie Review

இவானாவின் கண்டுபிடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தால் அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வில்லன் அபி தியோல், சில சூழ்ச்சி வேலைகள் செய்கிறார். இதனால் மனமுடையும் இவானா தற்கொலை செய்து கொள்கிறார்.

இதுபோன்ற செயல்களை தடுக்க ஒரு ஹீரோ வேண்டும் என அர்ஜுன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். இதன் பின்னர் சூப்பர் ஹீரோவாக மாறும் சிவகார்த்திகேயன் என்ன செய்கிறார்? அர்ஜுன் மறைந்து வாழ்வது ஏன்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டே போகிறார். அந்த வகையில் இந்த படத்திலும் சூப்பர் ஹீரோவாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் காதல், காமெடி, இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் என அனைத்தையும் சிறப்பாக செய்துள்ளார். நாயகிக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

படத்தின் மற்றொரு நாயகன் அர்ஜுன் தான், தனது அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். அபி தியோல் தனது வில்லத்தனதால் மிரள வைக்கிறார். மேலும் இவானா, ரோபோ சங்கர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளனர்.

பலர் இயக்குநர்கள் எடுக்க தயங்கும் சூப்பர் ஹீரோ கதையை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் சிறப்பாக கையாண்டுள்ளார். நம் நாட்டின் கல்விமுறை வேலையாட்களை தான் உருவாக்குகிறதே தவிர அவர்களை வெற்றியாளர்களாக உருவாக்குவது இல்லை. குழந்தைகளின் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பெற்றோர், அவர்களது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிய விதம் சிறப்பு. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.

சிவகார்த்திகேயன், அர்ஜுன் மற்றும் வில்லன் அபிதியோல் ஆகியோர் பேசும் ஒவ்வொரு வசனங்களுக்கும் கைதட்டல் அள்ளுகின்றன. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

மொத்தத்தில் ’ஹீரோ’ சூப்பர் ஹீரோவாக மிளிர்கிறார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close