உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஷகிப் அல் ஹசன்.. மீண்டும் சிக்கல்.. நடந்தது என்ன?
பங்களாதேஷ் - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஏஞ்சலோ மேத்யூஸ் களத்துக்கு தாமதமாக வந்தார்.
பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் பெரும் சர்ச்சையில் சிக்கி விவாதத்தை கிளப்பிய நிலையில், மறுநாளே உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
சில ரசிகர்கள் இது காயத்தால் தானா? அல்லது சர்ச்சையால் விலகி விட்டாரா? என சந்தேகம் கிளப்பி வருகிறார்கள். ஆனால், ஷகிப் அல் ஹசனுக்கு உண்மையிலேயே காயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைத்துள்ளது. அவர் விரைவில் நாடு திரும்ப உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
பங்களாதேஷ் - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி பேட்டிங் செய்த போது ஏஞ்சலோ மேத்யூஸ் களத்துக்கு தாமதமாக வந்தார்.
அதன் பின்னும் அவர் ஹெல்மட் சரியில்லை என மேலும் தாமதம் செய்ததால் விதிப்படி புதிய பேட்ஸ்மேன் பேட்டிங் செய்ய நேரம் கடத்தியதற்காக டைம் அவுட் கோரினார் ஷகிப் அல் ஹசன். அம்பயர் அவுட் கொடுத்தார்.
பொதுவாக விதிப்படி இது அவுட் என்றாலும் எதிரணிகள் இது போன்ற நியாயமான காரணங்களால் தாமதம் ஆனால் அவுட் கேட்க மாட்டார்கள். ஆனால், ஷகிப் அல் ஹசன் அவுட் கேட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. சிலர் மேத்யூஸ் செய்தது தவறு எனக் கூறினாலும், சிலர் ஷகிப் அல் ஹசன் அவுட் கேட்டு இருக்கக் கூடாது என அவரை விமர்சனம் செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த பின் இலங்கை - பங்களாதேஷ் வீரர்கள் இடையே பல வார்த்தை மோதல்கள் நடந்தன. போட்டிக்கு பின் இலங்கை வீரர்கள் கை குலுக்க வரவில்லை. இந்த நிலையில், அதற்கு மறுநாள் ஷகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் அந்தப் போட்டியில் பேட்டிங் செய்த போது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. வலியுடன் ஆடிய அவர் போட்டிக்கு பின் ஸ்கேன் எடுத்து பார்த்த போது எலும்பு முறிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து அவர் விரைவில் பங்களாதேஷ் திரும்ப உள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மோத உள்ளது. நவம்பர் 11 அன்று அந்த போட்டி நடக்க உள்ள நிலையில், கேப்டன் ஷகிப் அல் ஹசன் அணியை விட்டு பிரிந்து செல்ல இருக்கிறார்.
ஏற்கனவே அந்த அணி புள்ளிப் பட்டியலில் முதல் எட்டு இடங்களுக்குள் வந்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும் என போராடி வருகிறது வங்கதேசம்.
அதன் ஒரு பகுதியாக இலங்கை அணியை வீழ்த்தி கடைசி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. இந்த நிலையில், ஷகிப் இழப்பு அந்த அணிக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டுமின்றி பங்களாதேஷ் அடுத்ததாக நவம்பர் 27 முதல் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளது.
ஷகிப் அல் ஹசனின் காயம் குணமாக மூன்று முதல் நான்கு வாரம் ஆகும் என்பதால் அவர் டெஸ்ட் தொடர் துவங்கும் குணமாக வேண்டும் என்ற நோக்கில் விரைவில் நாடு திரும்ப உள்ளார்.
அங்கே அவருக்கு இந்த காயத்தில் இருந்து மீண்டு வர சிகிச்சை அளிக்கப்படும் என பங்களாதேஷ் அணி வட்டாரம் கூறி உள்ளது.