ஆஸ்திரேலியா செய்த சொதப்பல்.. 8 பந்தில் 4 விக்கெட்டை தூக்கிய நியூசிலாந்து
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 388 ரன்கள் குவித்தது.
ஆனால், 400 ரன்களை தாண்ட வாய்ப்பு இருந்தும் கடைசி இரண்டு ஓவர்களில் மோசமாக சொதப்பி 10 விக்கெட்களையும் இழந்தது ஆஸ்திரேலியா.
அதிக ரன்களை விட்டுக் கொடுத்த நியூசிலாந்து அணி கடைசி 2 ஓவர்களில் மட்டும் கிடுக்கிப்பிடி போட்டு சுமார் 20 - 30 ரன்களை குறைத்தது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 59 பந்துகளில் சதம் அடித்து தன் முதல் உலகக்கோப்பை போட்டியை வண்ணமயமாக மாற்றினார்.
மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் தன் அதிரடி ஃபார்மை தொடர்ந்தார். அவர் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரும் 19 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தனர். ஆனால், இவர்களுக்கு பின் வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை.
ஸ்டீவ் ஸ்மித் 18, மிட்செல் மார்ஷ் 36, மார்னஸ் லாபுஷேன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் மேக்ஸ்வெல் 38வது ஓவருக்கு முன் இறங்கி தன் அதிரடியால் 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.
அதன்பின் ஜோஷ் இங்லிஸ், பாட் கம்மின்ஸ் கடைசியில் அதிரடி ஆட்டம் ஆடினர். இங்லிஸ் 28 பந்துகளில் 38 ரன்களும், கம்மின்ஸ் 14 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா 48 ஓவர்களில் 387 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. எப்படியும் கடைசி இரண்டு ஓவர்களில் 20 முதல் 30 ரன்களை ஆஸ்திரேலியா சேர்த்து ஸ்கோரை 400க்கும் மேல் கொண்டு செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அடுத்த எட்டு பந்துகளில் ஆஸ்திரேலியா 1 ரன் சேர்த்து 4 விக்கெட்களை இழந்தது. ட்ரென்ட் போல்ட் 49வது ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஹென்றி கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 388 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
முதல் 20 ஓவர்களையும், கடைசி 14 ஓவர்களையும் மோசமாக வீசிய நியூசிலாந்து அணி கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை ரன் குவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியது.
நியூசிலாந்து பந்துவீச்சு இந்தப் போட்டியில் மோசமாக இருந்தாலும் இந்த கடைசி 2 ஓவர்களால் ஆறுதல் அடைந்தது அந்த அணி. அதே சமயம், பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததும் ஒரு முக்கிய காரணம்.