போட்டிக்கு பின் இலங்கை அணி செய்த செயல்.. ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு?

பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.

போட்டிக்கு பின் இலங்கை அணி செய்த செயல்.. ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு?

இலங்கை அணி வீரர்கள், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த உடன் கை குலுக்க மறுத்தனர். இது போன்ற செயல் கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இலங்கை அணி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பங்களாதேஷ் - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த போது ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய தயார் ஆக தாமதம் ஆனது.

ஐசிசி விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆனால், அடுத்த பேட்ஸ்மேன் 2 நிமிடங்களுக்குள் பந்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மேத்யூஸ் கிரீஸில் 1.50 நிமிடத்தில் வந்து விட்டார். 

ஆனாலும் அதன் பின் அவர் ஹெல்மட் சரியில்லை என அதை மாற்றினார். அதில் இன்னும் கூடுதல் நேரம் ஆனது. அதனால், விதிப்படி ஷகிப் அல் ஹசன் அவுட் கோரினார். மேத்யூஸ் தன் ஹெல்மட் சரியில்லை என்ற வாதத்தையும் முன் வைத்தார்.

ஆனால், பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் தான் என கூறி விட்டார். அவர் நினைத்து இருந்தால் அவுட் கேட்காமல் அவரை பேட்டிங் ஆட வைத்திருக்க முடியும். இந்த சம்பவத்தால் இலங்கை அணி வீரர்கள், பங்களாதேஷ் அணி மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடி 279 ரன்கள் எடுத்தது. அடுத்து பங்களாதேஷ் பேட்டிங் செய்ய வந்த போது, பல முறை இலங்கை வீரர்கள் - பங்களாதேஷ் வீரர்கள் இடையே வாக்குவாதம் எழுந்தது. 

பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.

இந்த சூழலில் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின் அந்த அணியின் வீரர்களை, இலங்கை அணி வீரர்கள் கை குலுக்கி அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், பங்களாதேஷ் வீரர்கள் கை குலுக்க இலங்கை வீரர்களை நெருங்கிய போது அவர்கள் விலகிச் சென்றனர்.

இலங்கை கேப்டன் குசால் மென்டிஸ் தலைமையில் மொத்த வீரர்களும் தங்கள் அறைக்குள் சென்றனர். அதன் பின் இரு அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் கை குலுக்க வந்திருக்க வேண்டும். ஆனால், இலங்கை அணி சார்பில் பயிற்சியாளர் குழு மட்டுமே வந்தது. இலங்கை வீரர்கள் தங்கள் கோபத்தால் வெளியே வர மறுத்தனர்.

இது போல போட்டி முடிந்த உடன் கை குலுக்காமல் செல்வது விதிப்படி தவறு இல்லை என்றாலும், ஒரு அணியாக இதை செய்து இருப்பதால் கிரிக்கெட் விளையாட்டுக்கு களங்கம் விளைவித்ததாக இலங்கை வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp