வீரர்களுக்கு இருமல்.. நிலைமை மோசமாகும் முன்னர் பயிற்சியை ரத்து செய்த பங்களாதேஷ் அணி
பங்களாதேஷ் வீரர்கள் பலருக்கு டெல்லி வந்தது முதலே இருமல் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதற்கு காரணம் டெல்லியில் தற்போது இருக்கும் மோசமான காற்று மாசு தான் என கூறப்படுகிறது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் பலருக்கு இருமல் பிரச்சனை ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை நடக்க வேண்டிய பயிற்சியை பங்களாதேஷ் கிரிக்கெட் அணி நிர்வாகம் ரத்து செய்தது.
பங்களாதேஷ் அணி, அடுத்த திங்கள்கிழமை (நவம்பர் 06) இலங்கை அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் விளையாட உள்ளது.
அதற்கு முன்னதாக மூன்று நாட்கள் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டு இருந்தது பங்களாதேஷ் அணி. அதன்படி வெள்ளிக்கிழமை அந்த அணி மாலை 6 மணிக்கு பயிற்சி செய்ய மைதானம் வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை.
இதை அடுத்து இது குறித்து ஊடகத்தினர் விசாரித்த போது பங்களாதேஷ் வீரர்கள் பலருக்கு டெல்லி வந்தது முதலே இருமல் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதற்கு காரணம் டெல்லியில் தற்போது இருக்கும் மோசமான காற்று மாசு தான் என கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே டெல்லியில் தான் காற்றின் தரம் மோசமாக உள்ளது. அங்கே அவசரநிலையை குறிக்கும் அபாய கட்டமான காற்று தர அளவீடு 400ஐ தாண்டி இருக்கிறது. கடந்த வியாழன் அன்று டெல்லியில் காற்று தரத்திற்கான அவசரநிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் விலை என்ன.. பங்குகளை வாங்க சவுதி அரேபியா இளவரசர் விருப்பம்!
மேலும், பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. கட்டுமான பணிகள் நிறுத்தவும், வாகனங்கள் சாலையில் செல்லவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பங்களாதேஷ் வீரர்கள் டெல்லி சென்றதில் இருந்தே மோசமான காற்றின் காரணமாக இருமல் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பங்களாதேஷ் வீரர்கள் திறந்த வெளி மைதானத்தில் பயிற்சி செய்தால் அவர்களுக்கு மோசமான சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் பயிற்சி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் இரு நாட்கள் பயிற்சி செய்ய வாய்ப்பு உள்ள நிலையில், பங்களாதேஷ் அணி என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவில்லை.
இது பற்றி பங்களாதேஷ் அணியின் இயக்குனர் காலெத் மஹ்மூத் கூறுகையில், "நாங்கள் இன்று ஒரு பயிற்சிக்கு வரவிருந்தோம், ஆனால், இங்கே நிலவும் மோசமான நிலைமை காரணமாக நாங்கள் ரிஸ்க் எடுக்கவில்லை.
எங்களுக்கு இன்னும் இரண்டு நாட்கள் பயிற்சி உள்ளது. சில வீரர்கள் இப்போதே இரும ஆரம்பித்துள்ளனர், இது அபாயத்தைக் குறிக்கிறது. நவம்பர் 6 ஆம் தேதி எங்களுக்கு ஒரு போட்டி இருப்பதால் வீரர்கள் உடல்நலத்தில் சமரசம் செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.