ஆஸ்திரேலியா செய்த தவறு.. கூடுதலாக ரன்கள் எடுத்த இந்திய அணி.. நடந்தது என்ன?
அடுத்து இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. அப்போது நிதிஷ் குமார் ரெட்டி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்காட் போலான்ட் பந்துவீச்சை சந்தித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சுப்மன் கில், துவக்க வீரர் கே எல் ராகுலுடன் இணைந்து ரன் சேர்த்தனர். கே எல் ராகுல் 37 ரன்கள் எடுத்தும், சுப்மன் கில் 31 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. அப்போது நிதிஷ் குமார் ரெட்டி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்காட் போலான்ட் பந்துவீச்சை சந்தித்தார். 28வது ஓவரில் ஸ்காட் போலான்ட் வீசிய பந்து நிதிஷ் குமாரின் காலில் பட்டது. அதற்கு ஆஸ்திரேலிய அணி எல் பி டபுள்யூ அவுட் கேட்டது. ஆனால், அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார்.
அப்போது ஆஸ்திரேலிய அணி ரிவ்யூ கேட்டு இருக்கலாம். ஆனால், பந்துவீச்சாளர் ஸ்காட் போலான்ட் இன்சைட் எட்ஜ் ஆகி இருக்கலாம் என்று கூறியதால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ரிவ்யூ கேட்கவில்லை. பின்னர் ரீப்ளேவில் அது எல் பி டபுள்யூ அவுட் என தெரிய வந்தது.
அந்த வாய்ப்பில் தப்பிய நிதிஷ் குமார் அதிரடியாக ஆடி 42 ரன்கள் சேர்த்தார். அவருடன் கூட்டணி அமைத்து ஆடிய அஸ்வின் 22 ரன்கள் சேர்த்து இருந்தார். அஸ்வினுக்கு பின் வந்த ஹர்ஷித் ராணா மற்றும் பும்ரா டக் அவுட் ஆனார்கள். முகமது சிராஜ் 4 ரன்கள் எடுத்தார். இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது.
ஒருவேளை நிதிஷ் குமார் ரெட்டி டக் அவுட் ஆகி இருந்தால் இந்திய அணி கூடுதலாக 10 - 20 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து இருக்கும். அஸ்வினால் 22 ரன்களை எடுத்து இருக்க முடியாது. அந்த வகையில் பார்த்தால் ஆஸ்திரேலியா ரிவ்யூ கேட்காததால் இந்திய அணி கூடுதலாக 50 - 60 ரன்கள் எடுத்து இருக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங்கில் நிதிஷ் குமார் தான் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அவர் 42 ரன்கள் குவித்த நிலையில், அவருக்கு அடுத்து கே எல் ராகுல் 37 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்தப் போட்டியில் மூதவ் ஈரர்கள் விராட் கோலி 7 ரன்களிலும், ரோஹித் சர்மா 3 ரன்களிலும் ஆட்டமிழந்து இருந்தனர்.