‘இந்தியா மெகா வெற்றி’.. இந்தியாவுக்கு ஏறு முகம்... புள்ளிப் பட்டியல் இதோ!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலிய அணி, அடுத்த 4 போட்டிகளில் 2-ல் வென்றாக வேண்டும்
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்ஸின்போது பிட்ச், முழுக்க முழுக்க பௌலர்களுக்கு சாதகமாக இருந்ததால், யாரும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. இந்தியா 150 ரன்களையும், ஆஸ்திரேலியா 104 ரன்களையும்தான் அடித்தன.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளின் முதல் செஷனுக்கு பிறகு, பிட்ச் பேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்தது. இதனால், இந்திய அணி துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 161 (297), கே.எல்.ராகுல் 77 (176), விராட் கோலி 100 (143) ஆகியோர் அபாரமாக விளையாடி அசத்தினார்கள்.
மேலும், வாஷிங்டன் சுந்தர் 29 (94), நிதிஷ் ரெட்டி 38 (27) ஆகியோரும் ஓரளவுக்கு சிறப்பாக ரன்களை அடித்ததால், இந்தியா, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 487/6 ரன்களை அடித்து, டிக்ளெர் அறிவித்தது. இந்தியா மொத்தமாக 533 ரன்கள் முன்னிலை பெற்றதால், ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தனர்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ட்ராவிஸ் ஹெட் 89 (101), மிட்செல் மார்ஷ் 47 (67), அலேக்ஸ் ஹேரி 36 (58) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோரை அடித்தனர். மற்றவர்கள் படுமோசமாக சொதப்பியதால், ஆஸ்திரேலிய அணி 238/10 ரன்களை மட்டும் சேர்த்து, இறுதியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தனர்.
முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா வென்றதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், இந்தியா 61.11 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 57.69 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அடுத்து, 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மூன்றில் வென்றால், உறுதியாக பைனலுக்கு முன்னேறிவிட முடியும். ஒருவேளை, அடுத்த 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றால், இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு, உறுதியாகாது என்றால், வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலிய அணி, அடுத்த 4 போட்டிகளில் 2-ல் வென்றாக வேண்டும் என்பதால், அடுத்த 4 போட்டிகள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.