சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 379 ரன்கள், 14 விக்கெட்டுகள்.... 2வது நாளில் என்ன நடந்தது?
இந்த நிலையில், இந்திய அணியின் கைகளில் போதுமான விக்கெட்டுகள் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்களை சேர்த்துள்ளதுடன், 29 ரன்களே பின் தங்கி உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் கைகளில் போதுமான விக்கெட்டுகள் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 86 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து களத்தில் இருந்தது. இதன்பின் 2வது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் 337 ரன்களை குவித்தது.
இதன் 157 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. நட்சத்திர வீரர்களான கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
கம்மின்ஸ் வீசிய சாதாரண பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்து கேஎல் ராகுல் 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, ஜெய்ஸ்வால் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி வந்தார்.
அவருடன் சுப்மன் கில்லும் நல்ல கம்பெனி கொடுக்க, இளம் வீரர்கள் இருவரும் இணைந்து இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் ஸ்காட் போலாண்ட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் நடையை கட்டினார்.
தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி வழக்கம் போல் 4வது ஸ்டம்ப் லைன் பந்துக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இன்னொரு பக்கம் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த சுப்மன் கில் மிட்சல் ஸ்டார்க்கின் அற்புதமான யார்க்கரால் போல்டாகி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 6 ரன்களில் எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்தில் போல்டாகினார். சீரான இடைவேளையில் விக்கெட்டை இந்திய அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ரிஷப் பண்ட் - நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் இணைந்து 2வது நாள் ஆட்டத்தை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்திய அணி 2வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களை சேர்த்துள்ளது.
பண்ட் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது நாள் ஆட்டத்தில் மொத்தமாக 379 ரன்கள் குவிக்கப்பட்டு, 14 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கிறது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக 2வது நாளிலேயே வீழ்த்தப்பட்டிருப்பதால், 3வது நாளுடன் இந்த டெஸ்ட் போட்டி முடிவடையும் என்று பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் ரிஷப் பண்ட் - நிதீஷ் குமார் ரெட்டி நிலைத்து பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை எடுக்கும் பட்சத்தில், இந்திய அணியால் 2வது இன்னிங்ஸில் சவால் அளிக்க முடியும்.